ஜனவரி 4 பாவங்களை மன்னிகிறவர் ஏசாயா 44:21-28
“உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக்
கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசாயா 44:22).
மனிதனுடைய வாழ்க்கையில் பாவம் என்கிற சாபம் அவனை நிர்ப்பந்தமானவனாக மாற்றிவிட்டது. ஆனால் மனிதனை யார் இந்த பாவத்தின் மீறுதலில் இருந்து, பாவத்தின் சாபத்திலிருந்தும் விடுவிக்கமுடியும்? தேவன் ஒருவரே அந்த காரியத்தை செய்யமுடியும் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவேதான் ‘உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்’ என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்முடைய ஜனங்களின் அக்கிரமத்தையும், மீறுதல்களையும், பாவங்களையும் மன்னிக்கிற தேவனாக இருக்கிறார். ஆகவே தான் மேலுமாக ‘என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்’ என்று சொல்லுகிறார்.
கர்த்தரிடத்தில் நாம் திரும்பக்கடவோம். அவர் நம் பாவத்தின் அகோரத்திலிருந்து நம்மை மீட்டு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி அவருடைய பிள்ளைகளாகும்படிக்கு நிலைநிறுத்துகிறார். “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25). கர்த்தர் தம் நிமித்தமாகவே நம் பாவங்களை குலைத்துப்போடுகிறார். நம்முடைய கடந்தகால பாவம் எவ்வளவு கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறதாக இருக்கிறது. “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங்கீதம் 103:12) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய பாவங்களை எல்லாவற்றையும் உணர்த்தும் படியாக தேவனிடத்தில் மன்றாடி, அவைகள் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டுவிட்டு மனந்திரும்பக்கடவோம். தேவன் அதை மன்னிக்கிறவராக இருக்கிறார்.