“இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்” (யோவான் 4:10).  

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்திரியோடு பேசும்பொழுது இவ்விதமாய் சொல்லுகிறார். தேவன் நமக்கு இரட்சிப்பு என்கிற மிகப்பெரிய ஈவை கொடுக்கிறார். அவர் கொடுக்கும் ஈவுகளை இந்த உலகத்தின் காரியங்களோடு நாம் ஒப்பிடப்பட முடியாது. இவ்வளவு பெரிதான ஈவுகளைக் கொடுக்கிற இந்த தேவனை நாம் அறிந்திருப்போமானால், நம்முடைய வாழ்க்கையில் இந்த உலகத்தின் காரியங்களில் நாம் வாஞ்சையுள்ளவர்களாகக் காணப்பட மாட்டோம். அன்பு, சந்தோஷம், சமாதானம் நீடிய, பொறுமை, சாந்தம், இச்சையடக்கம் இவையெல்லாவற்றையும் ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரின் மூலமாக ஈவாக நமக்குக் கொடுக்கிறார். இந்த வேதம் போதிக்கின்ற தேவன் எவ்விதமானவர் என்பதை நாம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய மகத்துவம், மேன்மை, வல்லமை மிகப் பெரியது! அவருடைய கிருபை அவருடைய அன்பு எவ்வளவு மேன்மையானது! இவைகளை நாம் அறியாமல் கீழான அளவுகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசு அந்த சமாரிய ஸ்திரியைப் பார்த்துச் சொன்னது, “தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.” நம்முடைய வாழ்க்கையில் அவரே ஜீவத்தண்ணீரைக் கொடுக்க முடியும். நம்முடைய வாழ்க்கையில் ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.