“நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்” (எபேசியர் 6:20).

பவுல் இந்த இடத்தில் எபேசு சபையைப் பார்த்து தனக்காக ஜெபிக்கும்படியாகக் கேட்கிறார். தன்னுடைய சொந்தப் பாதுகாபிற்காக அல்ல. சுவிசேஷப் பணிக்காகவே. என்ன ஒரு ஆச்சரியமான ஒரு காரியம்! சுவிசேஷத்திற்காக தைரியமாய் போராடுகிறதற்கு அழைக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள். அவர்கள் இந்தப் பணியைச் செய்யக்கூடாத படிக்கு சாத்தன் பல விதங்களில் தடைசெய்கிறவனாய் இருக்கிறான். ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையைத் தைரியமாய்ப் போதிக்கும்படியாக அவர்களுக்கு விசேஷித்த தேவக் கிருபை கொடுக்கப்படுவது அவசியம். மெய்யான தேவப் பிள்ளைகள் கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்காகப் பாரத்தோடும் கருத்தோடும் ஜெபிப்பது ஆண்டவருக்கு மகிமையாகவும், அநேக மக்கள் இருளில் இருந்து வெளிச்சத்தில் வருவதற்காகவும் அவர்கள் கருவிகளாய் உபயோகப்படுத்தவதற்கு ஏதுவாக நாம் ஜெபிப்பது அவசியம். நம்முடைய ஜெபத்தில் உண்மையாய் உழைக்கின்ற ஊழியர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பது மேன்மையான காரியம். அவர்கள் தேவனுடைய கிருபையினால் பலப்படுத்தப் பட வேண்டும். அவ்விதமாக ஊழியர்கள் பலப்பட்டு கர்த்தருடைய வார்த்தையை மக்களுக்குப் பிரசங்கிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களைச் சந்திக்கின்றார். ஒரு பாவி மனம்திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். இதைப் போல மேன்மையான காரியம் இல்லை. ஆகவே நாம் உண்மையான ஊழியக்காரர்களுக்காக ஜெபிப்போம்.