ஜனவரி 12

“நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.” (நீதிமொழிகள் 10:11).

மெய்யாலுமே நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று. ஏனென்றால் அவன் ஜீவனைப் பெற்றவன். ஒருக்காலத்தில் அவனுடைய வாய் அழிவுக்கேதுவானவைகளைப் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அவன் புதிய ஜீவனைப் பெற்றவனாக இருப்பதின் நிமித்தமாக, அவன் ஜீவ ஊற்றைக் கொண்ட வாயை உடையவனாய் இருக்கிறான். என்ன உன்னதமான ஒரு மாற்றத்தை கர்த்தர் ஒரு பாவியின் வாழ்க்கையில் செய்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது, மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. “ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்” (நீதிமொழிகள் 13:14) என்று வேதம் சொல்லுகிறது. நீதிமான் ஒரு ஞானவான். ஏனென்றால் அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய ஞானத்தைப் பெற்றவனாக இருக்கிறான். ஆகவே அவன் போதிக்கும்படியான போதனை, ஆண்டவருடைய வார்த்தைகளாக இருக்கிறபடியால், நித்திய ஜீவனைக் கொடுக்கிற வசனங்களாக இருக்கிறபடியால், அவைகள் நிச்சயமாக ஜீவ ஊற்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல” (நீதிமொழிகள் 15:7) என்று வேதம் சொல்லுகிறது.  இந்த உலகத்தில் தேவனுடைய ஞானம், அறிவைப் பெற்று வாழுகிற வாழ்க்கையைப் போல, ஒரு நல்ல வாழ்க்கை என்பது எதுவாக இருக்க முடியும்? பரத்தின் ஞானத்தைப் பெற்ற வாழ்க்கையே தேவனுடைய பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற ஆசீர்வாதமாக இருக்கின்றது. இந்த உலக ஞானம் அழிந்துவிடும். உலக ஞானத்தை தேவன் பைத்தியமாக மாற்றுகிறார். ஆனால் கர்த்தருடைய ஞானத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கையில், அவர்கள் பேசுகிறது எல்லாமே தேவ ஞானத்தை வெளிப்படுத்துகிறதாய் இருக்கும். தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறதாக  அவருடைய மேன்மையை வெளிப்படுத்துகிறதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.