கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 1         ஒத்தாசை வரும் பர்வதம்        சங் 121 ; 1 – 8

‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்’ (சங்கீதம் 121 : 2)

            சங்கீதக்காரன் எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் போது நாம் உண்மையிலேயே வெட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறோம். அநேகருடைய நம்பிக்கை தேவன்பேரில் இல்லை. ஆனால் இந்த சங்கீதக்காரனுக்கு ஒத்தாசை யாரிடத்திலிருந்து வரும் என்றும், அவர் எப்படிப்பட்டவர் என்றும் அறிக்கையிடுகிறான். அவனுக்கு ஒத்தாசை தேவனிடத்திலிருந்து வரும் என்கிறான். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எப்பொழுது ஒத்தாசை தேவை? நாம் பெலனற்றவர்களாக இருக்கும்பொழுது, உதவியற்றவர்களாக இருக்கும்பொழுது ஒத்தாசை தேவை. மனிதனுடைய ஒத்தாசை விருதா. ஆனால் தேவ ஒத்தாசையோ நம்முடைய மகா பெரிய தேவை. யோபு, ‘திடனில்லாவதவனுக்கு நீ எப்படி ஒத்தாசை பண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? (யோபு 26 : 2 ). என்று கேட்கிறார். நீ திடனில்லை, பெலனில்லை என்று சொல்லுகிற வேளையில் தேவன், ஒத்தாசையை அனுப்பி உன்னைத் திடப்படுத்துகிறவரும் பெலப்படுத்துகிறவருமாயிருக்கிறார். ஆகவேதான் சங்கீதகாரன் எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் என்று சொல்லுகிறார். நீ உன்னுடைய தேவையான, நெருக்கமான  நேரங்களில் கர்த்தரை நோக்கிப்பார். அவரிடத்தில் ஒத்தாசையைக் கேள். தேவன் உன்னை வெட்கமடையச் செய்யாமல் உனக்கு ஒத்தாசையை அனுப்புவார்.

            அடுத்ததாக, ஒத்தாசை கேட்கும்படியானவர் யார், எப்படிப்பட்டவர் என்பதையும் சங்கீதக்காரன் அறிக்கையிடுகிறார். ‘ அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்.’ சர்வஏகாதிபத்திய தேவன், சர்வ வல்லவர், அவர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும். காற்றையும் கடலையும் அதட்டினார், அவைகளுக்கு கட்டளையிட்டார், அமைதிப்படுத்தினார். நாமும் நம்முடைய வாழ்க்கையில் சங்கீதக்காரனைப்போல நமக்கு ஒத்தாசை அனுப்பும் தேவனை நோக்கிப்பார்ப்போமாக.