பிப்ரவரி 11

 “கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்” (சங்கீதம் 48:1).

நம்முடைய ஜெப வாழ்க்கையில் தேவனைத் துதிப்பதை ஒரு பெரிய பங்களிப்பாய் கொண்டிருப்பது அவசியம். அநேக வேளைகளில் நம்  ஜெபத்தில் தேவனைத் துதிப்பது பற்றி அதிகம் எண்ணுவதில்லை. ஆனால் நம்முடைய ஜெபத்தில் அவரைத் துதிப்பது மிக அவசியம். “அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?” (சங்கீதம் 113:1-5). அநேக வேளைகளில் நாம் தேவனைத் துதிப்பதை தொடர்ச்சியான ஒரு வழிமுறையாகக் கொண்டிருப்பதில்லை. தேவனை நாம் எந்தளவுக்கு துதிக்க அறிந்திருக்கின்றோமோ அந்தளவுக்கு அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறோம். “ஸ்தோத்திரபலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” என்று தேவன் சொல்லுகிறார். ஆகவே அது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காரியமாய் இருப்பது அவசியம். “கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது” (சங்கீதம் 147:1). நாம் முழு இருதயத்தோடு தேவனைத் துதிப்பது நமக்கு இன்பமான ஒன்றாய்க் காணப்பட வேண்டும். “ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது” (சங்கீதம் 145:1-3). கர்த்தரை உயர்த்தி அவருடைய மேன்மை மகத்துவம் வல்லமை கிருபை எல்லாவற்றையும் நாம் நினைவுகூர்ந்து அவரை உயர்த்தி ஸ்தோத்தரிப்பது அவசியம். ஏனெனில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு உணர்ந்திருக்கின்றோமோ அந்தளவுக்கு அவரைத் துதிப்போம். ஆகவே நாம் தேவனைத் துதிப்போம் அது நமக்கு இன்பமானது, கர்த்தருக்குப் பிரியமானது.