“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 34:8).     

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கர்த்தர் நல்லவர் என்பதை அதிகமாய் ருசிக்கக்கூடிய வேளை என்பது அவனுடைய வாழ்க்கையில் ஏற்படுகிற போராட்டங்கள் நெருக்கங்கள் மத்தியிலே தான். ஒருவேளை நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்குமென்றால் அதில் கர்த்தர் நல்லவர் என்பதை ருசிப்பதை விட, நம்முடைய இக்கட்டான வேளைகளில் கர்த்தர் நம் வாழ்க்கையில் தனிப்பட்ட விதத்தில் செயல்படும்பொழுது அவர் நல்லவர் என்பதை நாம் அதிகமாய் ருசிபார்க்கிறோம். “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் மேல் நம்பிக்கை கொண்டு வாழுகிற ஒரு வாழ்க்கையைப் போல ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை என்பதில்லை. நம்முடைய பாரங்கள் நெருக்கங்கள் எல்லாவற்றையும் அவர்மேல் வைத்துவிட்டு அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற ஒரு வாழ்க்கை. வானத்தையும் பூமியையும் படைத்த இந்த தேவனை நமக்குக் துணையாகக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன்னை வழிநடத்துகிற ஒரு தேவன் உண்டு என்பதை அறிந்திருக்கிற வாழ்க்கை மெய்யாலுமே சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. வெறுமையாய் நாம் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைப்பதல்ல, அது உண்மையானதும் நிச்சயமானதும் நம்முடைய வாழ்க்கையைக் கர்த்தருடைய அருமையான கிருபையில் வழிநடத்துகிற பாதையைக் கொண்டதாக இருக்கிறது. தேவன் அவ்விதமாக நம்மை ஆசீர்வதிப்பாராக.