மார்ச் 3   

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” (1தீமோத்தேயு 1:15).

மனிதனுடைய வாழ்க்கையில் அதி முக்கியமான நோக்கம் என்னவென்றால், தேவனை அனுபவிப்பதும் அவரை மகிமைப்படுத்துவதுமே. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் தேவனை அனுபவிக்கின்ற ஒரு அருமையான வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையில் தேவன் அபாத்திரமான நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் நான் பாவத் தன்மையுள்ளவன் என்பதை  அறிந்திருக்கும்பொழுது மாத்திரமே ஆண்டவருடைய இரட்சிப்பின் மகிமையையும் அவர் கொடுத்திருக்கின்ற சிலாக்கியங்களையும் அதிகமாய் அனுபவிக்க முடியும். நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு நாம் ஒரு பாவி என்றும், நமக்குள் பாவத் தன்மை இருக்கிறது என்ற உணர்வும் காணப்படுகிறதோ அந்தளவுக்கு ஆண்டவருடைய கிருபை மற்றும்  அன்பை ருசிபார்க்கிறவர்களாகக் காணப்பட முடியும். இங்கு பவுல் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அநேக சமயங்களில் நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் தேவனோடு நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. இவ்வளவு பரிசுத்தமான தேவன், பாவியாகிய என்னைத் தெரிந்துகொண்டிருக்கிறார், என்னைத் தம்முடைய கிருபையினால் வழிநடத்துகிறார் என்ற உள்ளான உணர்வு நம்முடைய வாழ்க்கையில் அவருடைய கிருபையை மேன்மைபடுத்தக் கூடியதாய்க் காணப்படும். அநேக வேளைகளில் நாம் நம்மைக் குறித்து மேலாக எண்ணிக்கொள்கிறோம். ஆனால் நாம் எந்தளவுக்கு, நான் ஒரு பாவி என்று உணருகின்றோமோ அந்தளவுக்கு மாத்திரமே தேவனை நாம் அனுபவிக்க முடியும். ஏன் நம்முடைய வாழ்க்கையில் தேவனை மகிமைப்படுத்தக்கூடிய காரியம் இல்லை? நாம் நம்மைக் குறித்து உயர்வாக எண்ணிக்கொள்வதினால்தான். ஒரு மனிதன் எந்தளவுக்கு தான் ஒரு பாவி என்று உணருகின்றானோ அந்தளவுக்கு மாத்திரமே அவன் தேவனுடைய கிருபையின் மேன்மையை உணருகிறவனாய் இருப்பான். மேலும் அவன் ஆண்டவருடைய அன்பை ருசிக்கிறவனாகவும் அவரை மகிமைப்படுத்துகிறவனாகவும் இருப்பான்.