ஜனவரி 19                            

“ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்” (புலம்பல் 3:31).

      இஸ்ரவேல் மக்கள் கைவிடப்பட்டதாக எண்ணி வாழ்ந்து வந்த நாட்களில் எரேமியா அவர்கள் பக்கமாக நின்று எழுதின புத்ததம் புலம்பல். இந்த மக்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது எரேமியா: ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார் என்று சொன்னார். நீங்கள் கைவிடப்பட்டோம் என்று எண்ணி வாழ்கிறீர்களா? நீங்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்று வருந்துகிறீர்களா? பயப்படாதேயுங்கள், ஆண்டவர் என்றைக்கும் உங்களைக் கைவிடமாட்டார். “கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்” (1 சாமு 12:22).

      கர்த்தர் உங்களை அவருக்கு பிரியமான ஜனங்களாக மாற்றிக்கொள்ளவே விருப்பமுள்ளவராக இருக்கிறார். அவரை விட்டு நாம் ஏன் விலகிப் போகவேண்டும்? அவருடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் உங்களைக் கைவிடாமல் இருப்பதே அவருக்கு பிரியம். “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்கீதம் 94:14) என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் அவருடைய சுதந்திரம். தாய் தன் குழந்தையை மறந்தாலும், நான் உங்களை மறக்க மாட்டேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவர் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டார். அவருடைய இரக்கம் மிகப்பெரியது. ஆகவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கைவிடப்பட்டதாக ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் கிருபையில் ஐஸ்வரியமுள்ளவர். கிருபையின் அடிப்படையில் செயல்படுகிறவராக இருக்கிறார். கிருபையினால் உங்களை இரட்சித்தவர் முடிவு பரியந்தம் காப்பவராக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும்.