கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 5        பண ஆசை    1 தீமோ 6 : 1 – 12

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்( 1தீமோத்தேயு 6 :  10 )

            இந்த உலகத்தின் குறிக்கோள் பணமே. பணமிருந்தால் எல்லாம் செய்யலாம் என்பதே உலக மக்களின் தத்துவம். பண ஆசை தேவன் மேல் வைத்திருக்கும் வாஞ்சையை மாத்திரமல்ல தம்முடைய மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள் அனைவர் மேலேயும் வைத்திருக்கும் அன்பையும் பாதிக்கிறது. விசுவாசத்தைப் பாதிக்கிறது. பணஆசை உள்ளவன் செலவு செய்ய விரும்ப மாட்டான். வீட்டிலோ குடும்பத்திலோ, ஏதாகிலும் செலவு வந்துவிட்டால் உடனே கோபப்படுவான். அதினால் குடும்பத்தில் சமாதானம் பாதிக்கப்படுகிறது. பணம் இருந்தாலும் அதை அவன் எப்போதும் விட்டுவிட மனதற்றவனாய் இழுத்தடிக்கவே ஆசைப்படுவான். அவசியமான செலவுகளைச் செய்ய விரும்பமாட்டான். இவ்விதமான அவனுடைய குணம் எப்போதும் அவனை சமாதானமற்றவனாகவே இருக்கச் செய்யும்.

            அதோடு  நின்றுவிடாமல், அவன் போதுமென்ற மனதற்றவனாய் இருப்பதினால் இன்னும் எப்படி அதிகபணம் சேர்க்கமுடியும் என்றே திட்டமிடுவான். பணம் என்று சொல்லப்டும்போது பணத்தால் சம்பாதிக்ககூடிய வீடு, நிலம், பொருள் ஆகிய இவைகளும் அடங்கும். ஆகவே அதிகமான பணம் சேர்க்கவேண்டும் என்ற ஆசையினால் அதிகநேரம் உழைக்க விரும்புவான். தகாத வழியிலும் செல்லுவான். கடினபட்டு உழைப்பது நல்லது. ஆனால் அவன் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய நேரத்தைக் கொடுக்கமாட்டான். அதை அவன் வீண் என்று எண்ணுவான். மேலும் ஓய்வு நாளிலும் கூட அதை பணம் சம்பாதிக்கும்படி எப்படியாகிலும் உபயோகப்படுத்தவே எண்ணங்கொண்டிருப்பான். அவன் தேவனுடைய வார்த்தையை வாசிக்கவோ, ஜெபிக்கவோ நேரமில்லை என்பான். இவ்விதமானவர்கள் ஆலயம் செல்லுவதை விரும்பாமல் தங்கள் ஆத்துமாவை கெடுத்து, தங்களை இவ்வுலகத்திலும், வரும் உலகத்திலும் உருவக் குத்திக்கொள்வார்கள். இந்த சத்தியத்தின் வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்து பார்.