ஆகஸ்ட்  8

“இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” (1 பேதுரு 2:1)

பேதுரு உபத்திரவத்தின் வழியாகக் கடந்து போய்கொண்டிருந்த இந்த விசுவாசிகளுக்கு இவ்விதமாய் எழுதுகிறார். தேவன் உங்களுடைய வாழ்க்கையில் தயையுள்ளவர் என்பதை மெய்யாலும் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறவர்களாக இருப்பீர்களானால் என்று ஆலோசனையைத் தொடர்ந்து சொல்லுகிறார். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் அவ்விதம்  கர்த்தருடைய தயை, இரக்கத்தை ஒவ்வொரு நாளூம் ருசிக்கிறீர்களா? இன்றைக்கு அநேகருக்கு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் தேவனுடைய அன்பில் நிலைத்து வளருகிற வாழ்க்கையாக அல்ல, தங்களுக்கென்று ஒரு அளவை, ஒரு எல்லையை வைத்துக் கொண்டு ஜீவிக்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு வட்டமிட்டு அதிலேயே அவர்கள் திருப்தியடைந்து கொள்ளுகிறார்கள்.

இது உண்மையிலேயே வேதம் போதிக்கும் கிறிஸ்தவம் அல்ல. இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார்  (மத்தேயு 28:20)  ஒவ்வொரு நாளும் தேவன் நம்மோடு கூட இருந்து காத்து நடத்துகிறவராய் இருக்கிறார். இதை நாம் விசுவாசக் கண்களைக்கொண்டு பார்க்கமுடியும், உணர முடியும். காலைதோறும் அவர், புதிய கிருபைகளை நமக்குக் கொடுக்கிறவராயிருக்கிறார்.

அப்படி, தயையுள்ளவரென்பதை ருசிபாத்திருப்பாயானால் எப்படி ஜீவிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த உலக மக்களைப் போல ஜீவிக்காதே. “சகல துர்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு” என்று சொல்லப்படுகிறது. இவைகள் இன்னும் உன்னில் இருக்குமானால், அவைகளை முற்றிலும் ஒழித்துக்கட்டவேண்டும். இவைகள் தொடர்ந்து உன்னுடைய வாழ்க்கையில் காணப்படுமானால் உனக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் நீ வளரமுடியாது. அதற்கு பதிலாக  நீ எதை வாஞ்சிக்கவேண்டும்? வாஞ்சையோடே கர்த்தருடைய வார்த்தையை வாசி, தியானி. அது  உனக்கு மெய்யான ஆத்தும ஆகாரமாயிருக்கட்டும். அப்போது நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.