மார்ச் 2
“உன் காலைத் தள்ளாடவொட்டார்;உன்னைக் காக்கிறவர் உறங்கார்”
(சங்கீதம் 121:3)
தேவனே இந்த உலகத்தில் மனிதனையும், அவனுடைய நடைகளையும் நியமித்தவரும் உறுதிப்படுத்துகிறவருமாக இருக்கிறார். அவரே சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவன். அவர் தம்முடைய பிள்ளைகளை தள்ளாடவொட்டாமல், பாதுகாக்கிறவராக இருக்கிறார். நீதிமொழிகள் 2:8 -ல் “அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்” என்று சொல்லுகிறார். தேவன் தம்முடைய மக்களின் வழிகளையும், பாதைகளையும் அவருடைய வழியில் நடத்திச்சென்று அவர்களைக் காப்பாற்றுகிறவராக இருக்கிறார்.
தேவன் ஒருவரே மெய்யான பாதுகாவலராகவும், அவர் ஒருவரே நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறவருமாகவும் இருக்கிறார். அவர் மாத்திரமே நம்மை அழிவுக்கும், நாசமோசத்திற்கும், பாவத்திற்கும் விலக்கி பாதுக்காக்கிறார். நிச்சயமாக தம்முடைய மக்களை பாதுகாப்பதில் அவர் தவறுவதில்லை. மேலும் நீதிமொழிகள் 3:23 -ல் “அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது” என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் கர்த்தர் நம்முடைய மேய்ப்பராக இருப்பதினால் நாம் பயமின்றி நமக்கென்று நியமித்திருக்கும் வழியில் நடக்க முடியும்.
தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய திட்டத்தின்படி வழிகளை நியமித்திருக்கிறார். ஆனால் அவர் நியமித்திருக்கிற வழிகள் எதுவாயினும் (உயர்வானாலும், தாழ்வானாலும், மேலானாலும், கீழானாலும்) நமது கால்களை அவர் இடற அனுமதிக்கமாட்டார். அதுமட்டுமல்ல, நாம் இந்த உலக மனிதர்களைப் போல எதிர்காலத்தைக் குறித்து ஒரு பயத்தோடே எதிர் நோக்கக்கூடிய வாழ்க்கை முறையாக அல்லாமல் நாம் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கர்த்தரைச் சார்ந்துகொள்ளுகிற சிலாக்கியங்களை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவரை நீ பற்றிக் கொள். உன் கால்களைத் தள்ளாடவொட்டார்.