கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் : 18             கர்த்தருடைய கோபம்.             2 சாமுவேல் 24 : 1 -15

‘கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது இஸ்ரவெல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.’ (2 சாமுவேல் 24 : 1)

தாவீது ஆடுகளை மேய்த்துகொண்டிருந்த எளியவன். ஆனால் தேவன் அவனைத் தெரிந்துக்கொண்டு அற்பமானவனாயிருந்த  அவன் சிங்காசனம் ஏறும் அளவுக்கு உயர்த்தப்பட்டான். தேவன் தாவீதுக்கு அநேக வெற்றிகளை யுத்தங்களில் கட்டளையிட்டார். எல்லருக்கும் முன்பாகவும் தாவீது உயர்த்தப்பட்டான். இவைகள் எல்லாம் கர்த்தரால் உண்டானது. அவனுடைய பெரிய வெற்றிகள் அவனுடைய சேனைகளின் மிகச்சிறந்த திரமையினால் அல்ல, தேவனால் அருளப்பட்டது. ஆனால் தாவீது இதை மறந்துவிட்டான். தன்னையும் தன்னுடைய படை பலத்தையும் எண்ணிப் பெருமைப்பட ஆரம்பித்தான். ஜனப்பெருக்கத்தை எண்ணி பெருமைகொண்டான். ஜனம் தேவனால் கொடுக்கப்பட்டது என்று எண்ணி தேவனுக்கு மகிமையைச் செலுத்தாமல் தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டான். ஒருவேளை இவ்வளவு ஜனங்களுக்கு, தான் ராஜா என்று எண்ணி பெருமையடைந்திருக்ககூடும். அவருடைய இந்த எண்ணம் செயலில் வெளியாயிற்று.

அன்பானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில் இவ்விதம் உங்களை உயர்வாகவும் பெருமை உள்ளவர்களாகவும் எண்ணிக்கொள்ளுகிறீர்களா? தேவன் கொடுத்த அநேக நன்மைகள் உங்களுடைய திறமையால், பெலத்தால் உண்டானது என்று எண்ணுகிறீகளா? பெருமை எப்போதும் ஒரு மனிதனை கீழே தள்ளிவிடும். ஆனால் அவன் அதைச் செய்த பின்பாகவே அவன் இருதயம் வாதித்தது. பாவம் வஞ்சகமானது. அதைச் செய்யும் வரை அதனுடைய கொடூரம் வெளிப்பட்டது. ஆனால் அதன் பின்பு அதனுடைய கூர்மை வெளிப்படும். தாவீது செய்த பாவத்தினிமித்தம் அதன் விளைவை பாருங்கள். ‘கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்த காலம்வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள். (2 சாமு 24 : 15 ) நமது பாவத்தின் விளைவு மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை எண்ணி பாவத்தைக் குறித்து பயப்படுவோமாக.