ஜூன் 22

      “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;” (சங்கீதம் 31:15).

      தாவீது சவுலினால் துரத்தப்பட்டபொழுது, மரணத்தை எண்ணி ஒருவேளை இவ்விதமாக எழுதியிருக்கக் கூடும். ஏனென்று கேட்டால், இந்த வசனத்தின் அடுத்தப் பகுதியைக் கவனிக்கும் பொழுது, “என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” என்று சொல்லுகிறார். அன்பானவர்களே! ஒரு பரிசுத்தவானின் வாழ்க்கையில் இது எவ்வளவு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறதாக இருக்கிறது இது. ஒருவேளை நம் வாழ்க்கையில் எதிர்மாறான சூழ்நிலைகள் ஏற்படலாம். அதினால் முற்றிலும் நாம் தளர்வுற்றவர்களாக் காணப்படலாம். ஆனால் கர்த்தருடைய கரத்தில் நம் காலங்களும், நேரங்களும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் சகலத்தையும் ஆளுகிற தேவன். நம்மை பராமரிக்கிற கர்த்தர் அவர்.

      “சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க” (யோபு 24:1) என்று வேதம் சொல்லுகிறது. காலங்களும், நேரங்களும் சகலத்தையும் நிர்ணயித்த தேவன் கரத்தில் இருப்பதினால் நாம் எதைக் கண்டும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு எதிராக பல சூழ்நிலைகள் எழும்பின பொழுது அவர் இதைதான் சொல்லுகிறார். “என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது” (யோவான் 7:6). கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நம் காலங்கள், நேரங்கள் எல்லாம் அவர் கரத்தில் இருக்கிறது. அவரை விசுவாசிக்கிறவன் ஒருக்காலும் வெட்கப்பட்டு போகமாட்டான். நம் வாழ்க்கையில் அவர் அனுமதிக்கிற அனைத்துமே நன்மைக்கு ஏதுவானவைகள். ஆகவே நாம், நமக்கு ஏற்படுகிற எதிர்மாறான சூழ்நிலைகள்  குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. கர்த்தரே நமக்கு அரண்.