கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 4                                  கர்த்தரின் ஊழியம்                             கொலோ 3 : 16 – 24

எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனபூர்வமாய்ச் செய்யுங்கள்‘ (கொலோசேயர் 3 : 24)

நீ எதை செய்தாலும் தேவனுக்கென்று செய். ஒரு வேளை மனிதர்கள் என்னைப் பார்க்காமல் அல்லது விளங்கிக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் தேவன் உன்னைப் பார்க்கிறார். அதற்குறிய  பலனை தேவன் கொடுப்பார். செய்யும்படியான காரியத்தைக்காட்டிலும் அதில் உள்ள மனப்பான்மையைத் தேவன் கனப்படுத்துவார். இன்றைக்கு அநேகர் இவ்விதம் செய்யாமல் மனுஷருக்குப் பிரியமாய் காணப்படவே பிரயாசப்படுகிறார்கள். அது வீண். நீ யாரைப் பிரியப்படுத்தும்படி அதிகமாய் பிரயாசப்படுகிறாயோ அவர்கள் உன்னை உதாசினப்படுத்திவிடலாம், தேவன் அப்படியல்ல. ‘தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுவதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.’ (எபி 6 : 10)

தேவனுக்கென்று ஊழியம் செய்வதைக் குறித்து மனிஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாக பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.'(எபேசியர் 6 : 6) மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபே 6 : 8) அருமையான ஊழியரே! உன் ஊழியம் எப்படி இருக்கிறது? நீ மனுஷருக்குப் பிரியமாய் இருக்க விரும்பி பார்வைக்கு ஊழியம் செய்கிறாயா? இன்றைக்கு பார்வைக்கு ஊழியம் செய்கிறவர்கள் கடைசியில் ஏமார்ந்து போய்விடுவார்கள்.

மேலும் ஊழியத்தைக்குறித்து  நான்கு காரியங்களைப் பார்க்கிறோம். அவை என்ன? 1. கிறிஸ்துவின் ஊழியகாரராக ஊழியஞ்செய்யுங்கள். 2. மனபூர்வமாய் ஊழியஞ்செயுங்கள். 3. தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ்செய்யுங்கள். 4. நல் மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். ஊழியத்தில் முழுமையான ஈடுபாடு தேவை, அவரை குறையாய் அல்ல. கர்த்தருடைய ஊழியத்தை அவர் வார்த்தை சொல்லுகிறபடி செய்யவேண்டும். அப்பொழுது கர்த்தர் உன்னோடிருந்து உன் ஊழியத்தைக் கனப்படுத்துவார்.