“கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.” (சங்கீதம் 93:1).

கர்த்தர் இராஜரிகம் பண்ணுவதினால் சகலமும் அசையாமல் நிலைத்திருக்கிறது. தேவன் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்பவராக இருக்கிறார். பூச்சரத்தில் மாத்திரமல்ல, நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்பவராக இருக்கிறார். நாம் சோதனைகள் மற்றும் நெருக்கத்திலே சோர்ந்துவிடுகிறோம், பயப்படுகிறோம். ஆனால் தேவனுடைய ஆளுகையின் கீழாக நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவது நிமித்தமாகவே அவ்வாறு நாம் தடுமாறுகிறோம். தேவன் தம்முடைய மக்களை நினைக்கிறார். இந்த அண்டசராசரத்தையும் தம்முடைய மக்களுக்காக செயல்படுத்தகிறவராக, இயக்குகிறவராக இருக்கிறார். இவ்வளவு பெரிய மகத்துவமான தேவன் நம்முடைய வாழ்க்கையில் அவர் கொண்டிருக்கிற  திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றும்படி ஆக நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம். அவருடைய கரத்தில் நம்மை ஒப்புக் கொடுக்கும் பொழுது நேர்த்தியாக அவர் சகலத்தையும் செய்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எல்லாவற்றையும் எனக்காக செய்து முடிக்கிற என் தேவனாகிய கர்த்தரே தேவன் ராஜரீகம் பண்ணுகிறார். ஆகவேதான் ரோமருக்கு நிருபத்தில் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று பவுல் சொல்லுகிறார். அநேக வேளைகளில் அவருடைய வார்த்தையை, அவருடைய மாறாத தன்மையை நாம் சந்தேகிப்பது நிமித்தமாகவே பலவிதமான நெருக்கங்கள் போராட்டங்களின் மத்தியில் கடந்து செல்லுகிறோம். ஆகவே தேவனுடைய ராஜ்யம் இன்றைக்கும் இருக்கிறது. அவரை முழுமையாக சார்ந்து கொள்வோமாக. அவரே நம் ராஜாதி ராஜா. அவருக்கே கீழ்ப்படிவோமாக.