கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 24       கர்த்தர் ஆதரவாக இருப்பார்   ஏசாயா 31:1-9

பறந்து காக்கிற பட்சிகளைப் போல,

சேனைகளின் கர்த்தர்

எருசலேமின் மேல் ஆதரவாக இருப்பார் (ஏசாயா 31:5)

    தாய்ப் பறவை தன்னுடைய குஞ்சுகளைப்  பாதுகாப்பதைப் பார்க்கும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! அவைகளுக்காக கூடுகளை அது கட்டுவதற்கு, எத்தனையோ இடங்களுக்குச் சென்று பலவிதமான பொருட்களைச் சேகரிக்கிறது. அந்தக் கூட்டில் தன்னுடைய குஞ்சுகளுக்கு மெத்தையைப்போல் மிருதுவான படுக்கையை ஆயத்தப்படுத்துகிறது. அவைகளுக்கு ஆகாரத்தை வேளாவேளைக்கு கொண்டுவந்து கொடுப்பதிலும் தாய்பறவை தவறுவதில்லை. மேலும் ஆபத்து வந்துவிட்டால், பறந்துவந்து அங்கு குஞ்சுகளின் மேல் தன் இறக்கையை விரித்து அவைகளைப் பாதுகாக்கின்றன.

    இவ்விதமன தேவன் தம்முடைய மக்களுக்கு ஆதரவாயிருப்பார் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. உனக்குத் தேவையானவற்றை தேவன் அனுதினமும் சரியான நேரத்தில் கொடுக்காமல் விடார். குஞ்சுகள் பசித்த நேரத்தில் தன் தாய் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிற வண்ணம், நீ தேவனுடைய வேளைக்காக காத்துக்கொண்டிருந்தால், பறவை எவ்விதம் சரியான நேரத்தில் தன் ஆகாரத்தைக் கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும் வண்ணமாக தேவன் உனக்குச் செய்வார்.

     ஆபத்து கிட்டிசேரும்போது தாய்பறவை தன் சிறகை விரித்து தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல, உன்னைத் தமது செட்டைகளின் நிழலிலே காப்பார். அருமையானவர்களே! நாம் தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் ஒரு குழந்தை நம்புவதைப் போல நம்பி சார்ந்துக்கொள்ள வேண்டும். அப்போது தேவன் நமக்குச் செய்யும் அநேக உதவிகளைக் காணமுடியும். மனிதன் நமக்கு ஆறுதலாக இருக்க மாட்டான். ஆனால் தேவன் நமக்கு நிச்சயம் ஆதரவாயிருப்பார். அவருடைய ஆதரவு என்ற படுக்கையில் நீ நிம்மதியாக உறங்கலாம். அப்பொழுது தாவீதைப்போல நாமும் சொல்லக்கூடும். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார் (சங் 18:18)