ஜூன் 1      

“மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 54:10).

தேவனுடைய மன உருக்கத்தையும், அது எந்த அளவுக்கு உன்னதமானது என்பதையும்  தேவன் இங்கு வெளிப்படுத்துகிறார். இந்த மன உருக்கம் என்பது வெறுமையாக ஒரு உணர்ச்சிவசப்படக் கூடிய விதத்தில் சிறிது நேரம் தோன்றி பின்பு மறைந்து போகிறதாக அல்ல. மனிதர்கள் திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு அதிகமாக மனதுருகுகிற காரியத்தைப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் மனதுருக்கம் நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு செயல்படும் என்பதாக நாம் நிச்சயமாகச்  சொல்லமுடியாது. திடீரென்று மனதுருகி அந்தவேளையில் மாத்திரமே அவர்கள் அதிகக் கண்ணீரோடும் கவலையோடும் காணப்படுவதை நாம் பார்க்கலாம். ஆனால் தேவனுடைய மனதுருக்கம் என்பது மிகவும் வித்தியாசமானது. அது எல்லைக்கும் வரம்புக்கும் அப்பாற்பட்டது.

இந்த இடத்தில் மலைகள் விலகலாம், பர்வதங்களும் கூட நிலைபெயரலாம், ஆனால் என் கிருபை உன்னைவிட்டு விலகாது என்கிறார். இது மனித அழவில் சாத்தியமானது என்பதை நாம் சொல்ல முடியாது. மலைகள் எப்படி விலக முடியும், பர்வதங்கள் எப்படி நிலைபெயர முடியும் என்று நாம் சிந்துப்போம். ஆனாலும் ஆண்டவர் தம்முடைய மனதுருக்கத்தை வெளிப்படுத்த இந்த காரியங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை நாம் பார்க்கிறோம். தம்முடைய கிருபையின் வெளிப்பாடாக இந்த இடத்தில் சொல்லுகிறார். அதாவது என்னுடைய மனதுருக்கம் உன்னை விட்டு விலகுவதில்லை. அதேவிதமாக நான் உனக்கு தேவனாயிருப்பேன், உன்னைப் பாதுகாத்து வழி நடத்துவேன், நான் தாங்குவேன், ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன், உன்னோடு நான் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவேன் என்று சொல்லுகிறார். எப்பொழுதும் அவர் உடன்படிக்கையை நிறைவேற்றுபவராக இருக்கிறார். நாம் தேவனோடு பண்ணின உடன்படிக்கையை மறந்து, அதை மீறி நடப்போம். ஆனால் தேவன் மாறாதவர் என்பதை அறிவோமாக.