“கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்” (சங்கீதம் 132:13).

ஆம் கர்த்தர் சீயோனைத் தமது வாசஸ்தலமாக இருக்கும்படித் தெரிந்து கொள்ளுகிறார். அருமையானவர்களே! இன்றைக்கும் ஒரு பாவியின் இருதயத்தை ஆண்டவர் தெரிந்து கொண்டு, அதை மாற்றி, அதைத் தம்முடைய வாசஸ்தலமாக்கும்படி விரும்புகிறார். என்ன ஒரு ஆச்சரியமான காரியம்! வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் ஒரு பாவியின் இருதயத்தை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அதைத் தம்முடைய வாசஸ்தலமாக இருக்கும்படி அவர் ஏன் விரும்ப வேண்டும்? இது முற்றிலும் விளங்கிக்கொள்ளக் கூடாத காரியம். இன்றைக்கும் தேவனுடைய செயல் மகத்துவமானதும் ஆச்சரியமுமாய் இருக்கின்றது. ஆனால் ஒரு பாவிக்கு இது எவ்வளவுப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கின்றது! ஒரு பாவி இந்த உலகத்தில் பாவத்திற்கு அடிமையாய் சந்தோஷமும் சமாதானமும் அற்றவனாய் வாழுகிற அவனுடைய வாழ்க்கையை ஒரு பிரயோஜனமான வாழ்க்கையாக மாற்றதக்கதாக தேவாதி தேவன் இவ்விதமாகச் செய்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தின் மேன்மையை விட்டு, இந்தப் பூலோகத்தில் ஒரு அடிமையின் ரூபம் எடுத்து மனுஷர் சாயலானார் என்று பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவர் மாற்றப்பட்ட ஒரு இருதயத்தில் அவனுக்குள்ளும் அவனோடும் வாசம் பண்ணுகிறார். அவனைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். இந்த உலகத்தில் தம்முடைய பிள்ளைகளாய் நிலைநிறுத்துகிறார். நித்தியமான மோட்ச ராஜ்யத்தில் அவனுக்கென்று ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அந்த இடத்தில் மகிமையாக வாசம்பண்ணும்படி வைக்கிறார். இவைகள் எல்லாமே உன்னதமான தேவனுடைய ஒரு திட்டம். ஒரு நம்பிக்கை இல்லாத பாவிக்கு நம்பிக்கைக் கொடுக்கின்ற திட்டம். இதைப் போல மகிமையானது ஒரு பாவிக்கு கிடைக்கக் கூடுமா? நம் வாழ்க்கையில் தேவனை மகிமைப்படுத்துவோம்.