“கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்” (சங்கீதம் 94:22).

இன்றைக்கு மனிதன் ஒரு அடைக்கலத்தைத் தேடுவதைப் பார்க்கிறோம். பொதுவாக இந்த நிலையற்ற உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் அடைக்கலம் தேடி அலைகிறவனாகவே காணப்படுகிறான். ஒரு பாதுகாப்பற்ற உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நாம் அடைக்கலத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த இடத்தில் சங்கீதக்காரன், கர்த்தரோ எனக்கு அடைக்கலம் என்று சொல்லுகிறான். தேவன் ஒருவரே நமக்குச் சரியான பாதுகாப்பாய் இருப்பார் என்பதை மறந்துவிடுகிறோம். தேவனை அடைக்கலமாகக் கொண்டிருக்கிற மனிதனுக்கு வேறொரு அடைக்கலம் தேவையில்லை. ஆனால் இந்த உலகத்தில் அடைக்கலத்தைத் தேடுகிறவர்கள் தாங்கள் ஒரு அடைக்கலத்தை தெரிந்துகொண்டோம் என்று சொன்னாலும் வெகு சீக்கிரத்தில் அந்த அடைக்கலம் மாறிப்போய்விடுகிறது. ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் கர்த்தரில் அடைக்கலத்தைத் தேடுவதை தங்களுடைய வாழ்க்கையில் மறந்துவிடக் கூடாது. மேலும் சங்கீதக்காரன், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார் என்றும் சொல்லுகிறார். மணலின் மேல் கட்டினப் புத்தியில்லாத மனுஷனைப் போல இல்லாமல் கன்மலையாகிய தேவன் பேரில் நம்முடைய வாழ்க்கையைக் கட்ட வேண்டும். அவருடைய வார்த்தையைச் சார்ந்து, அதின் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையைக் கட்டும்போது ஒருக்காலும் அது அசைக்கப்படுவதில்லை. புயல் போன்ற பல சூழ்நிலைகள் வந்தாலும் அது நிலைத்திருக்கும். அசைக்கப்படாத நிலையுள்ளவராய் இருக்கிற தேவன் நமக்கு அடைக்கலமும், கன்மலையுமாயிருக்கிறார்.