கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 2            கர்த்தர் எனக்கு அடைக்கலமானவர்     அப் 2:25-31

“அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு

முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான்

அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;” (அப் 2:25)

     தாவீது மாத்திரமல்ல கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனங்கள் ஒவ்வொருவரும் இதை சொல்ல முடியும். தேவனை நாம் எப்பொழுதும் நாம் நோக்கிப் பார்க்கிறவர்களாய் இருக்க வேண்டும். அப்பொழுது நாம் அசைக்கப்பட மாட்டோம் என்பதை கர்த்தர் நமக்கு உறுதி செய்வார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசாயா 41:13) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தர் தாமே நம்முடைய கரத்தை பிடித்து சொல்லுகிற இந்த வார்த்தை எவ்வளவு உன்னதமானது.

     ஆதலால் தான் ஏசாயா தீர்க்கதரிசி “கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்” (ஏசாயா 50:7) என்று சொல்லுகிறார். தேவன் நமக்கு துணையாக இருக்கிறார். ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் மன்னித்து நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்புரவாக்கிக் கொண்ட கர்த்தர் எப்பொழுதும் அவர் நமக்கு அரண். 

    தாவீது சொல்லுகிறார், “அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை” (சங்கீ 62:6). எந்த ஒரு சூழ்நிலையும் கர்த்தர் நமக்கு போதுமானவர். அவர் நம்மை பாதுகாத்து மேலான ஸ்தலங்களில் குடியிருக்கப்பண்ணுகிறவர். ஆதலால் பொல்லாங்கன் நம்மை அசைக்க முடியாது என்பதை நாம் நிச்சயப் படுத்திக்கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் இவ்விதமாக செய்வார் என்பதில் உறுதியாய் இரு. இது கர்த்தருடைய வார்த்தை. அவர் பொய்யுரையாத தேவன். நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தர் அவர் என்பதை மறந்துவிடாதே. விசுவாசத்தோடே உன்னை காத்துக்கொள்.