“ஆகையால், உயர வானத்திலும் தாழப் பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்” (உபாகமம் 4:39-40).

மோசே இங்கு மிக அருமையான சத்தியத்தைச் சொல்லுகிறார். தேவனைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை என்றும் அதை உணர்ந்து அதின் அடிப்படையில் உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று சொல்லுகிறார். நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் பொதுவாக விரும்புகிறோம். அதற்குத் தேவனுடைய வார்த்தையை நாம் கைக்கொள்வது அவசியம். நியாயப்பிரமாணம் ஒழிந்துவிடவில்லை. ஒழுக்க ரீதியானப் பிரமாணம் இன்றைக்கும் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகளை நாம் முழுமையாய் ஏற்றுக்கொள்வது அவசியம். நம்முடைய வாழ்க்கையில் நாம் இரட்சிக்கப்பட்ட பின்பாக நமது இரட்சிப்பின் அடையாளமாக நாம் நற்கிரியைகளை வெளிப்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே கர்த்தருடைய கற்பனைகளைக் கனப்படுத்துவோம். பின்பற்றுவோம். அப்பொழுது அவருடைய ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியும்.