“ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்” (ஏசாயா 37:4).
அசீரிய ராஜா தன் பிரதிநிதியாக ரப்சாக்கேவின் மூலமாய் யூத மக்களுக்கு செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனை நிந்தித்தவனாக அவன் பேசினான். ஆனால் இவைகளை தேவன் கேட்டார். இன்றைக்கு சுவிசேஷத்தை மற்ற மக்களுக்குச் செல்லக்கூடாதபடிக்கு தடைசெய்யவும் அரசாங்கமும் தலைவர்களும் எழும்பிச் செயல்படுகிறதை தேவன் பார்த்துகொண்டும் கேட்டுக்கொண்டுமிருக்கிறார். அவைகள் அவருடைய கண்களுக்கு மறைவாயிருக்கவில்லை. ஆனால் அசீரியா ராஜா இவ்விதமாய் பேசிவிட்டு அவனால் ஜெயம் கொள்ள முடிந்ததா? இல்லை. தேவன் தம்முடைய மகத்துவமான வல்லமையை இங்கு விளங்கப்பண்ணினார். தேவனுடைய ஜனங்களை அழிக்கும்படியாக அவன் திட்டமிட்டு மிகப்பெரிய சேனையைக் கொண்டு வந்து நிறுத்தினான். ஆனால் தேவனுடைய மகத்துவமான வல்லமையினால் அந்த சேனை முறியடிக்கப்பட்டது. மேலும் அந்த அசீரிய ராஜா தன் மகனால் கொல்லப்பட்டான். அருமையானவர்களே தேவனுக்கு விரோதமாகப் போராடி ஒருவரும் ஜெயிக்க முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுவதற்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய மக்கள் எழும்பலாம். ஆனால் தேவனுடைய வல்லமை ஒன்றே நிலைநிற்கும். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.