ஏப்ரல் 10         

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசாயா 58:11).

      கர்த்தர் அவ்வப்பொழுது நம்மை வழிநடத்துபவர் அல்ல. நித்தமும் எந்தச் சூழ்நிலையிலும் நம்மை வழிநடத்த வல்லவராக இருக்கிறார். இவ்விதமாக வாக்குப் பண்ணின தேவன், நிச்சயமாக நம்மை வழிநடத்துவார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8).  ‘மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி’ என்று நம்முடைய ஆத்துமாவைக் குறித்து பேசுகிறார். வறட்சியான காலங்களில் ஒருவேளை சோதனைகள், நெருக்கமான காலங்களிலும் கூட அவர் நம்முடைய ஆத்துமாவைத் திருப்தியாக்குவார். அதாவது நம்முடைய ஆத்துமாவைச்  சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும், நிறைவோடும் பாதுகாப்பார்.

      அதோடுகூட உங்கள் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார் என்று சொல்லப்படுகிறது. நம் ஆவிக்குரிய வாழ்க்கையைத் தேவன் தாமே காத்துக்கொண்டு நம்மை வழிநடத்துகிறார். ‘நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’ என்றும் சொல்லுகிறார். நம்முடைய ஆத்துமாவானது மிக முக்கியமானது என்பதை அறிவுறுத்தி தேவன் பேசுகிறார். இந்த வசனத்தை எடுத்துக் கொண்டு சரீரப்பிரகாரமான நன்மைகளையும், ஆசீர்வாதத்தையும் சொல்லி வியாக்கியானப்படுத்துவது தவறு. ஆத்துமாவை குறித்து ஆண்டவர் என்று சொல்லும்படியான காரியம் மெய்யாலுமே நம்முடைய நித்தியத்திற்குரியது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

               அனேகர் ஆத்தும நன்மையை விட சரீர நன்மையையே அதிகம் கர்த்தரிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார்கள். இது நம்முடைய ஆத்துமாவை குறித்த முக்கியத்துவத்தை உணராமல் வாழ்வது ஆகும். நாம் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் நம் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் என்ன லாபம் என்பதை மிக ஆழமாக உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை ஒரு குறுகிய கால வாழ்க்கை. ஆனால் நித்திய வாழ்க்கை என்பது நாம் என்றென்றும் வாழுகிற வாழ்க்கை. அதனுடைய நன்மையை நாம் அதிகமாக தேடுவது நம்முடைய கடமை.