ஆகஸ்ட்  20                                      

“பின்னும் தாவீது: என்னை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும்  தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும்  தப்புவிப்பார் என்றான்” (1சாமு 17:37)

     தாவீது சிறியவன், கோலியாத் இராட்சதன். இந்த கோலியாத்துடன் யுத்தம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை. ஆனால் கோலியாத் ஜீவனுள்ள தேவனை நிந்தித்தைக் கேட்ட தாவீது அவனுடன் யுத்தம் செய்ய முன்வந்தான். அப்பொழுது சவுலின் முன்பாக நின்ற தாவீது, உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்று சொன்னான். யாருமே கோலியாத்துடன் யுத்தம் செய்ய முன் வராதபோது, எப்படி இந்த சிறிய தாவீது முன்வர முடிந்தது? எல்லோரும் கோலியாத்தைக் கண்டு பயந்து நடுங்கி ஓடி ஒளிந்த போது, எப்படி இந்த எளியவன் அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தான்? விசுவாசத்தினால்தான்.

    தாவீது எப்படி தன்னுடைய விசுவாசத்தை உறுதிபடுத்துகிறான் என்று பாருங்கள். ‘என்னை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர்’ தாவீது தன்னுடைய கடந்த நாட்களில் தேவன் தன்னை விடுவித்த விதத்தை எண்ணிப்பார்க்கிறான். சிங்கமும் கரடியும் கொடிய மிருகங்கள். இவைகளை ஜெயிக்கவேண்டுமென்றால் அது சாதாரணமான காரியமல்ல. தேவன் அவனோடே கூட இருந்திராவிட்டால் அவன் அவைகளால் பீறுண்டு போயிருப்பான். தாவீது அந்த சிங்கத்தையும், கரடியையும், கொன்றதாகவும், அவ்விதத்தில் இந்த கோலியாத்தையும் கொன்றுவிட முடியும் என்றும் சொல்லவில்லை.  தேவன் கோலியாத்தைக் கொல்ல உதவி செய்வார் என்று அறிக்கையிட்டான்.

    அன்பானவர்களே! நாம் நம்முடைய விசுவாசத்தில் பெலப்பட்டு தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் செய்ய, நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நம்முடைய கடந்தக் கால விசுவாசப் பாதையை நோக்கிப் பார்க்கவேண்டும். முடியாது என்று எண்ணின எத்தனை வேளைகளில் தேவன் நம் பட்சத்தில் இருந்து வெற்றியைக் கொடுத்தார் என்று நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கடந்த நாட்களில் வெற்றியுடன் கடந்து வர உதவிசெய்த தேவன் தொடர்ந்து நமக்கு அவ்விதம் வெற்றியைக் கொடுப்பார் என்று விசுவாசிப்போமாக. நீ அவ்விதம் மெய்யாலும் விசுவாசிக்கிறாயா?