“இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்” (2சாமுவேல் 17:14).

தாவீதின் மகன் அப்சலோம் தாவீதைப் பின்தொடர்ந்து போகும்படியாக திட்டமிடுகிறான். அவன் தன்னையே இஸ்ரவேல் மக்கள் மேல் ராஜாவாக உயர்த்திக்கொண்டான். இவ்வாறு செயல்படும் வேளையில் தேவன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனையை அபத்தமாக்கினார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்பொழுது நமக்கு எதிராக எந்தவொரு மனிதனும் செயல்பட்ட திட்டமிட முடியாது. ஒருவேளை அவர்கள் தங்கள் ஞானத்தினால் அவ்வாறு செயல்பட்டாலும் அந்தத் திட்டத்தை அபத்தமாக்குகிறவர் கர்த்தர். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். நம்முடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது அவசியம். இந்த உலகத்தில் எந்தவொரு மனுஷனும் தேவனுடைய பிள்ளைக்கு எதிராக செயல்பட முடியாது. தேவன் அனுமதியாமல் அந்தக் காரியம் நடைபெறாது. “உனக்கு எதிராக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்” என்று ஆண்டவர் சொல்லுகிறார். என்ன ஒரு அருமையான பாதுகாப்பு. தேவனை நாம் சார்ந்து போகும்பொழுது நமக்கு எதிராக எழும்பும் எல்லாவற்றையும் நீக்கி நம்முடைய வாழ்க்கையில் நம்மை உயர்த்துவார் என்பதில் சந்தேகமில்லை. நாம் நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டியதில்லை. நாம் செய்யும்படியான காரியம் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்துவது.  தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நம்முடைய வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையும் அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். தேவன் அதில் நம்மை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவனைச் சார்ந்துகொள்ளுவதில் நாம் உறுதியாய் இருப்போம்.