“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கிவிட்டது” (யோனா 2:10).

மீனுக்குக் கர்த்தர் கட்டளையிட முடியுமா? அது ஆண்டவருடைய கட்டளையை அறிந்து செயல்பட முடியுமா? சொல்லப்போனால் மீன்கள் ஆண்டவருக்கு அழகாகக் கீழ்ப்படிக்கின்றது ஆனால் மனிதன் அவருக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் உண்டாக்கின தேவன், தன்னுடைய சிருஷ்டிப்பில் அவர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறவர். அவருடைய சிருஷ்டிப்பில் கீழ்ப்படியாமல் போன ஒன்றே ஒன்று மனிதன் மாத்திரமே. தேவன் மீனுக்குக் கட்டளையிட்டார். அது யோனாவை கரையில் கக்கிவிட்டது. ஆண்டவருடைய கட்டளைக்கு எவ்வளவு அழகாக இந்த மீன் கீழ்ப்படிந்திருக்கிறது. ஆம்! இந்த உலகத்தில் தேவன் எவற்றையும் உபயோகப்படுத்த முடியும். கழுதையைப் பேசும்படியாகக் கட்டளையிட்டார். பிலேயாமுக்கு உணர்த்தும்படியாக அவர் அவ்விதம் செயல்பட்டார். இன்றைக்கு தாம் சிருஷ்டித்தவைகளை நேர்த்தியாகக் கர்த்தர் உபயோகப்படுத்துவதையும் அதன் மூலமாக விழுந்துப்போன மனிதனுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களைக் கற்றுக்கொடுப்பதும் தேவனுடைய உன்னதமான ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. இந்த தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்! அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுண்டோ! அநேக வேளைகளில் நாம் மனம்தளர்ந்து விடுகிறோம். ஆனால் கர்த்தர் மிக நேர்த்தியாக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அருமையாய் யோனாவின் வாழ்க்கையில் மனம்திரும்புதலுக்கு ஏதுவாக மீனை உபயோகப்படுத்தின தேவன், நம்முடைய ஆசீர்வாதத்திற்காகவும் அவர் சிருஷ்டிப்புகளை உபயோகப்படுத்த முடியும். இந்த தேவனை நாம் சார்ந்து கொள்ளுவோமாக. நம்முடைய அறிவு குறைவுள்ளது. சுய புத்தியின்மேல் சாயாமல், கர்த்தரைச் சார்ந்துகொள்வோம்.