மார்ச் 30            

      “அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே

பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை

அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி,

நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள்

என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 31:33).

      கர்த்தர் தம் வார்த்தையை  நம்முடைய உள்ளத்திலே வைத்து, நம் இருதயப் பலகையிலே அவருடைய நியாயப் பிரமாணத்தை எழுதுகிறவராக இருக்கிறார். அதாவது நம்முடைய வாழ்க்கையை  தேவனுடைய வார்த்தைக்கு ஒத்ததாக மாற்றுவேன் என்று சொல்லுகிறார். தேவன் அவ்விதம் நம் வாழ்க்கையில் செய்யும்பொழுது, நாம் எவ்விதம் தேவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொண்டு வாழுவோம் என்பது அதிமுக்கியமான ஒன்று.

      இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை தங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுவதை விட, உலகத்தின் பலகாரியங்களை தங்கள் மனதில் வைத்து எப்பொழுதும் அதைச் செய்யவே தீவிரிக்கிறார்கள். அவ்விதமான மனிதர்களுடைய வாழ்க்கையைச் சாத்தான் ஆண்டு வழிநடத்துகிறான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்த்தர் தம்முடைய ஜனங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள். “நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்” (ஏசாயா 5:17). இங்கு தேவன், “என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே” என்று தம்முடைய மக்களைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறார். 

      நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனுடைய வார்த்தையை நம் இருதயத்தில் பதித்துக் கொள்ளுவது மிக முக்கியமான ஒன்றாகும். நாம் எப்பொழுது தேவனுடைய வார்த்தையை அசட்டைப்பண்ணுகிறோமோ அப்பொழுது நம் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை. தேவனுடைய கிருபை நம்மீது இருக்கும் என்று சொல்லமுடியாது. இன்னும் சொல்லப்போனால், தேவனுக்கு நாம் சத்துரு. நாம் தேவனுடைய வார்த்தையை அசட்டைப் பண்ணினால், சாத்தான் நம்மில் வாசம் பண்ண ஆரம்பித்துவிடுவான். தேவனுடைய வார்த்தையே நித்திய ஜீவன். ஜீவனுள்ள வார்த்தையை அசட்டைப்பண்ணாதே.