கிருபை சத்திய தின தியானம்

ஜூலை  3                ஜீவனுள்ளளோரின் தேவன்            லூக் 2:27-38

“அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்;

எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்” (லூக்கா 20:38)

   இந்த  உலகத்தில் மனிதர்களை இரண்டாக பிரிக்கலாம். ஒரு பகுதியினர் கிறிஸ்துவுக்குள் ஜீவனுள்ளோர், மறுபிரிவினர் ஆவியில் மரித்தோர். கிறிஸ்துவுக்குள் ஜீவனுள்ளோர் யார்? இவர்களும் ஒரு காலத்தில் பாவத்திலும், அக்கிரமத்திலும் மரித்தவர்கள். ஆனால் கிறிஸ்துவோ அவர்களை  உயிர்ப்பித்திருக்கிறார். (எபேசியர் 2:1)  அவர்கள் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றவர்கள். அவர்களுடைய பழைய வாழ்க்கை வேறு, தற்போதைய வாழ்க்கை வேறு. அவர்களுடைய பழைய வாழ்கையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? முற்காலத்தில் இவ்வுலகத்திற்கேற்றபடியாகவும், கீழ்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்துவருகிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றப்படியாகவும் நடந்து கொண்டீர்கள்அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்தில் நமது மாம்ச  இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து சுபாவத்தினாலே மற்றவர்களைப்போல கோபாக்கினையின் பிள்ளைகாளயிருந்தோம்( எபேசியர் 2:2,3)

     அவர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் மேலான ஒரு ஜீவனுள்ள தொடர்பு உண்டு. அவர்களைப் பார்த்து மெய்யாலுமே தேவன் இவ்விதம் சொல்லக்  கூடியவராயிருக்கிறார். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். (எரேமியா 24:7). உன்னைக் குறித்து தேவன் இவ்விதம் சொல்லக்கூடுமா? அவரால் உயிர்பிக்கப்பட்ட  ஜீவனுள்ள  நபராக   நீ  இருப்பாயானால் தேவன் அவ்விதம் உன்னைக்குறித்து சொல்லமுடியும். உனக்கும் அவருக்கும் மெய்யான தொடர்பு உண்டா? நீ அவரை நோக்கி விசுவாசத்தோடு நோக்கிப்பார்க்கிற வாழ்க்கை உண்டா? அவர் உன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவராய் இருக்கிறாரா? உன் வாழ்க்கை அனைத்திலும் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட  விரும்புகிறாயா? இதைக்குறித்து நீ நிச்சயப்படுத்திக்கொள்வது மிக அவசியமானது. ஏனென்றால் அவர் மரித்தோரின் தேவனல்ல, ஜீவனுள்ளோரின்  தேவன்.