ஜனவரி 4    

“நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங்கீதம் 92:12).

ஆண்டவர் நீதிமானை எவ்வளவாய் ஆசீர்வதிக்கிறார் என்று பாருங்கள்! அவன் பனையைப் போல் செழிப்பான் என்றும் லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளருவான் என்றும் சொல்லுகிறார். அவனுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய செழிப்பும் வளர்ச்சியும் காணப்படும். இவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தை நாம் பார்க்கும்பொழுது, அது மிகுந்த ஆச்சரியமாக இருக்கின்றது.  கர்த்தர் எப்பொழுதும் நீதிமானை ஆசீர்வதிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறவராய் இருக்கிறார். துன்மார்க்கர் புல்லைப்போல் தழைத்து அழிந்து போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (சங்கீதம் 92:7). ஆனால் நீதிமான்கள் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவார்கள். “நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்” (சங்கீதம் 52:8). நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையை நம்பியிருக்கும் பொழுது, நாம் நிச்சயமாக பச்சையான ஒலிவமரத்தைப் போல் காணப்படுவோம். மேலும் “முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்” (ஏசாயா 55:13) அதுமாதிரமல்ல ஓசியா 14:5-6 “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்”. ஒரு நீதிமானுடைய வாழ்க்கை மற்றவர்கர்ளுக்குப் பிரயோஜனமான வாசனை வீசுவதைப் போல அது மிகுந்த ஆசீர்வாதமுள்ளதாய் இருக்கும். ஆகவே நீதிமான் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன். மேலும் அவன் கர்த்தருக்குப் பிரியமானவனாகவும் இருக்கிறான்.