கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 3               மகிமையின் ஜீவன்       பிலிப்பியர்  1:20-30

“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி 1:21).

        இந்த வசனம் ஆங்கில பதத்தில் வாழ்வதென்றால் கிறிஸ்துவுக்காக வாழுவேன், சாவு எனக்கு ஆதாயமே என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில்  நாம் கிறிஸ்துவுக்காக வாழுவதே மகிமைகரமான வாழ்க்கை. இந்த உலகத்துக்காக நாம் வாழுவோம் என்றால், நாம் ஏமாந்து போய்விடுவோம். நம்முடைய மரணத்திற்கு பின்பாக அது இழப்பாகவே இருக்கும். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்காக வாழும் பொழுது நம்முடைய மரணம் ஆதாயப்படுத்தபபட்ட ஒன்றாகவே இருக்கும். இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவோடு வாழுவது நம்முடைய வாழ்க்கையில் இந்த வனாந்திர பாதையிலும் வெற்றிகரமாக வாழக்கூடிய மக்களாக மாற்றுகிறது. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வெறுமையும் சஞ்சலமும் நிறைந்ததே.

        உன்னுடைய வாழ்க்கையில் நீ கிறிஸ்துவுக்காக வாழுகிறாயா?  கிறிஸ்துவுக்காக வாழுவதே உன்னுடைய வாழ்க்கையில் நோக்கமாக, குறிக்கோளாக இருக்கிறதா? அப்படியானால் நீ உன்னுடைய வாழ்க்கையிலும் ஆதாயமுள்ள நபராக, மரணத்திலும் ஆதாயமுள்ள நபராக வாழுகிற ஒரு ஆதாயப்படுத்திக்கொண்ட நபராக இருக்கிறாய் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் அனுமதிப்பதெல்லாம் நம்முடைய நன்மைக்கென்றே அனுமதிக்கிறார். “பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது” (1 கொரி 3:21).

            தேவன் நம்முடைய ஆதாயத்திற்கென்று எல்லாவற்றையுமே மிக நேர்த்தியாக அமைத்து செயல்படுத்துகிற ஞானமுள்ள கர்த்தர் அவர். அவரை நாம் சார்ந்து கொள்ளும் பொழுது நிச்சயமாக நம் வாழ்க்கையில் இழப்புகள் ஒன்றும் கிடையாது. அது ஆதாயமாகவே இருக்கும். இந்த உலக வாழ்க்கையின் முடிவில் நாம் தேவனோடு என்றென்றைக்கும் ஐக்கியம் கொண்ட மகிமையான வாழ்க்கையை சுதந்தரித்திருப்போம். அவருடைய வருகையிலும் நாம் அவ்விதமாகவே காணப்படுவோம். கொலோசெயர் 3:4 -ல் “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்று பவுல் சொல்லுகிறார். அருமையான சகோதரனே, சகோதரிய இந்த உலகத்தின் அற்பமான காரியங்களுக்காக, மகிமையான காரியங்களை இழந்துவிடாதே. கிறிஸ்துவே மெய்யான ஜீவன். திடமனதாயிருந்து, விசுவாசத்தைக் காத்துக்கொள்.