கிருபை சத்திய தின தியானம்

மே 7                 நிலையுள்ள சுதந்திரம்             எபி 1:10-21

“பரலோகத்தில் அதிக மேன்மையுள்ளதுமான

சுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து”  (எபி 10 : 34)

       ஒரு விசுவாசி நித்திய சுதந்திரத்திற்குப் பங்குள்ளவனாக இருக்கிறான் இந்த உலகத்தில் வாழும்போது, அவன் அந்த மேலான சுதந்திரத்தைக் குறித்து நிச்சயத்தோடு, வாழக்கூடியவனாகவும் காணப்படுகிறான். இந்த உலகத்தின் சுதந்திரம் பொய்யானது, நிலையற்றது. இதைச் சார்ந்து வாழும்படியாக அவன் அழைக்கப்படவில்லை. இந்த உலகத்துக்குரிய மக்கள் இந்த உலக வாழ்வை நம்பி, அதைச் சார்ந்து அவர்களுடைய தீர்மானங்களையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் நிலையற்றது என்று அறிந்திருந்தாலும் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைக் குறித்து அறியாதவர்களாய் வாழுகிறார்கள்.

      ஆனால் ஒரு விசுவாசி இந்த உலக வாழ்க்கையை நம்பி, அதையே அவன் தன்னுடைய குறிக்கோளாக கொண்டு ஒருபோதும் செயல்படமாட்டான். இந்த உலக மேன்மை, அனைத்தும் மறைந்து போகிறதென்பதை அவன் அறிவான். இது ஒரு பொய்யான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் மேன்மை என்று எண்ணப்படுகிற எதுவும், ஒரு இம்மியளவாகிலும் வரப்போகிற நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்திருக்கிறான்.

     அன்பான சகோதரனே! சகோதரியே! வேதம் இந்த நித்திய ராஜ்யத்தைக் குறித்தும், அதின் மேன்மையைக் குறித்தும் அதிகம் சொல்லுகிறதை நீ அறிவாயா? அதைக்குறித்து நீ எந்த  அளவுக்கு ஆவிக்குரிய தாகத்தையும், வாஞ்சையையும் கொண்டிருக்கிறாய்? நித்தியத்தைக்குறித்து ஆழமான விசுவாசமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இல்லாத ஒரு கிறிஸ்தவன், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சந்திக்கிற பல போராட்டங்கள், நெருக்கங்கள் மத்தியில், மிகுந்த மகிழ்ச்சியோடு கடந்துச் செல்லமுடியாது. அவன் அடையப்போகிற சுதந்திரத்தைக்குறித்து சிந்திப்பவனாய் மாத்திரமல்லாது, அவனுக்கு இவ்வளவு பெரிய சிலாக்கியத்திற்கு பங்குள்ளவனாகும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அவனுடைய ரட்சகரை அதிகமாய் நேசிப்பான். நித்தியத்தில் அவரைக்காண எப்பொழுதும் வாஞ்சையுடனிருப்பான்.