கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 3                  காத்திருப்பில் தேவனின் நீதி          சங்கீதம் 31:1–24

      “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள்,

அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்” (சங்கீதம் 31:24).

      நாம் எப்பொழுதும் கர்த்தருடைய சித்தத்திற்கு காத்திருப்பவர்களாக இருக்கவேண்டும். அநேக சமயங்களில் நாம் நம் வாழ்க்கையில் கர்த்தருக்காக காத்திருப்பதில்லை. நம் வாழ்க்கையில் காத்திருக்கும் நேரங்கள் வீணான காலங்கள் அல்ல. அநேக சூழ்நிலையில் நம்முடைய எண்ணங்கள் உடனே நிறைவேறவில்லையென்றால் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் நாம் கர்த்தருக்கு காத்திருக்கும்போது அவர் நம் காரியத்தை மிக நேர்த்தியாக, நாம் நினைப்பதற்கும் மேலாக இரட்டைதனையாக வாய்க்கப்பண்ணுவார் என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங் 27:14) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் மிக நெருக்காமான சூழ்நிலையைக் கடந்துபோகும் பொழுது நாம் கர்த்தருக்கு காத்த்திருப்பது வீண் என்று நினைக்கலாம். ஆனால் அது வீணல்ல.

      “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்” (ஏசாயா 35:3–4) என்று வேதம் சொல்லுகிறது. நம் வாழ்க்கையில் நடைபெறுகிற செயல்கள் ஒவ்வொன்றும் தேவன் முன்னறிந்தவையே. ஆகவே தேவன் நம் காரியத்தை ஏற்ற நேரத்திலே, ஏற்ற சமயத்திலே மிக நேர்த்தியாக செய்வார் என்பதில் சந்தேகமில்லை. நாம் அநேக சமயங்களில் பதட்டப்படுகிறோம். அப்பொழுது பயம் நம்மை ஆட்கொள்ளுகிறது. இவைகள் அவிசுவாசத்திற்கு அடித்தளமாகப் போய்விடும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அன்பானவர்களே! நீங்கள் நெருக்கமான சூழ்நிலையில் பொறுமையாக இருங்கள். தேவன் அதை வாய்க்கப்பண்ணுவார். உங்கள் பொறுமையில் தேவனுடைய நீதி விளங்கும். அவருடைய நாமம் மகிமைப்படும். அநேகருக்கு சாட்சியாக தேவன் அதனை மாற்றுவார்.