கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 12 மாயக்காரனின் சந்தோஷம் யோபு 20:1-10
“துன்மார்க்கரின் கெம்பீரம் குறுகினது என்பதையும் மாயக்காரனின் சந்தோஷம்
ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும் என்பதையும் …………. நீர் அறியீரோ?” (யோபு 20:4,5)
இந்த உலகத்தில் தேவனை அறியாத மனிதனின் மகிழ்ச்சி மிக குறுகினது என்பதை நாம் அறியவேண்டும். அவனின் கெம்பீரமும் சந்தோஷமும் க்ஷணபொழுதில் மறைந்துவிடும். அதைப் பார்த்து நாம் ஏமாந்துப்போகக்கூடாது. அதை நாம் வாஞ்சிக்கவும் கூடாது. அவன் நித்திய நித்தியமாய் அனுபவிக்கபோகிற நரகவேதனையைப் பார்க்கும்போது இது மிகவும் அற்பமானது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். பிரசங்கி இது ஒரு மாயை என்று சொல்லுகிறார். நான் என் உள்ளத்திலேசொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னை சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ இதுவும் மாயையாயிருந்தது. (பிரசங்கி 2:1)
அவ்விதமான மக்களின் முடிவை அநேகர் நோக்கிப் பார்ப்பதில்லை. ஆசாப் தான் எழுதிய சங்கீதத்தில் அவ்விதமான மக்களின் முடிவைப் பார்த்தபொழுது உணர்வு பெற்றார். அவர்கள் முடிவை கவனித்து உணருமளவும் அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது (சங் 73:17). அவர்களுடைய முடிவு எவ்வளவு பயங்கரமானது என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். வேதம் அவர்களுடைய முடிவைக் குறித்து என்ன சொல்லுகிறது? நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடத்தில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய் போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர். (சங் 73:18-20) இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறது. (1கொரி 7:31)
அருமையான சகோதரனே! சகோதரியே! நீ இந்த சங்கீதகாரன் சொல்வதுபோல ‘எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்‘ (சங்கீதம் 73:28) என்று சொல். அதுவே மெய்கிறிஸ்தவனின் இருதயத்தில் எப்போதும் இருக்கும் சிந்தை. நீ இவ்விதம் சொல்லக்கூடிய ஒரு கிறிஸ்தவனா என்பதை ஆராய்ந்துப்பார். போலியான வாழ்க்கையை நம்பி ஏமாந்துப் போகாதே.