கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 9                              உள்ளான மனிதன்                  2 கொரிந் 4:8-16

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது

நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந் 4:16)

   இன்றைக்கு அநேகருடைய கிறிஸ்தவ வாழ்க்கை வெறும் மேலோட்டமான வெளி மனிதனுக்குரியதாகதான் இருக்கிறது. கிறிஸ்தவ பெயர், ஆலயத்திற்குச் செல்லுகிறார்கள், வேதம் வாசிக்கிறார்கள், ஜெபிக்கிறார்கள். அல்லது சபைகளில் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக உற்சாகமாக கைத்தட்டி உரத்த சத்தத்தோடே  ஆர்ப்பரித்து ஆராதிக்கிறார்கள். வெளியே பார்க்கும்போது எல்லாம் மிகவும் அழகாக உற்சாகமாக காணப்படுகிறது.

     உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீ தோற்றுபோனவன். சாட்சியற்ற வாழ்க்கை. உன் பேச்சு, நடத்தை ஒரு கிறிஸ்தவனுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. உலகத்திலுள்ள கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை. இது உன்னை வெகு சீக்கிரத்தில் வீழ்த்திவிடுகிறது. சோதனையை சகிக்கக்கூடாமல் அதில் சீக்கிரமாய் விழுந்துவிடுகிறாய். மனித உறவுகளில் பிளவு, விரிசல், வெறுப்பு, பகை, கசப்பு, கோபம், பொறாமை அனைத்திற்கும் வெகு விரைவில் பலியாகிவிடுகிறாய்!

    பவுல், ஒரு மெய்கிறிஸ்த்தவனில் அனுதினம் நடக்கும் காரியத்தைப் பற்றி பேசுகிறார். ஒவ்வொருநாளும் அவன் தன்னுடைய பழைய மனிதனுக்குரிய பாவத் தன்மைகளை தேவ ஆவியானவரைக் கொண்டு அழித்துக்கொண்டே வருவான். பழைய மனிதனின் பாவத்தன்மையின் வலுவானது குறைந்துக் கொண்டே போகிறது. அவன் பாவத்துக்குரிய ஆசை இச்சைகளைத் தொடர்ந்து சிலுவையில் அறைந்து கொண்டேயிருக்கிறான். இது உன் வாழ்க்கையில் நடைபெறுகிறதா?

    அது மாத்திரமல்ல அவன் ஆவிக்குரிய உள்ளான ஆத்துமாவில் பெலத்தின்மேல் பெலன் பெறுகிறவனாய் இருக்கிறான். தாழ்மை பொறுமை, நீடிய சாந்தம் போன்ற ஆவியின் கனிகளை அதிகம் கொடுக்கக்கூடியவனாக கானப்படுகிறான். அவனுடைய உள்ளான மனிதனில் புதிய வாழ்க்கையும், புதிய ஜீவனையும் கொண்டிருப்பான். நீ எப்படி காணப்படுகிறாய்?