பிப்ரவரி 12 இருதயத்தின் விருப்பம் 2 இராஜா 5:1-27

“தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, நாகமானைப் பின்தொடர்ந்தான்” (2 இராஜா 5:20-21).

அன்பானவர்களே! நாம் எதைப் பின்தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஆவிக்குரிய காரியத்தைப் பின்தொடர்ந்து வாழ்கிறோமா? அல்லது அநீதியான ஆதாயத்தையும் உலகத்தையும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஒன்று ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் பின்பு இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும்’ என்று தேவன் சொல்லுகிறார். இதுவே வேதத்தின் வழிமுறையும், ஆண்டவருடைய வழியாகவும் இருக்கிறது. ஆனால் அநேகர் அதை விட்டு தங்களுடைய வாழ்க்கையில் உலக ஆதாயத்திற்காக, ஆவிக்குரிய வாழ்க்கையை அவமாக்கிப்போட்டு அதை பின்தொடர ஆவலாய் ஓடுகிறார்கள்.

எலிசாவின் வேலைக்காரனின் நிலையை நாம் அறிந்திருக்கிறோம். கேயாசி நாகமான் விட்டுச்சென்ற குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டான். ஆண்டவருடைய காரியத்துக்குப் புறம்பான விதத்தில் நம்முடைய வாழ்க்கையில் எதைச் சம்பாதித்தாலும், எதைப் பெற்றுக் கொண்டாலும் அதோடுகூட இணைந்த சாபம் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அநீதியான வழிமுறைகளில் நாம் சம்பாதிக்கும் முறை, ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்மைக்கு ஏதுவாக இருக்காது.

அதே சமயத்தில் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய விதத்தில் தீமையை நாமே வரவழைத்துக் கொள்கிறவர்களாய் காணப்படுவோம். ஒருக்காலும் நாம் இவ்விதமான நிலைக்குள் போகாதபடிக்கு நம்மைக் காத்துக் கொள்வோம். இது மிக அவசியமான ஒன்று. அநேகருடைய வாழ்க்கையில் இவ்விதமான காரியங்களைத் தெரிந்துகொண்டு வாழுகிறார்கள். இது மிகவும் இழிவான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை அல்லது இது மிகவும் கீழ்த்தரமான ஒரு வாழ்க்கையாகும். நமக்கு நாமே தீமையை தெரிந்துகொள்வது ஆபத்தானது.