இருதயம் கலங்காதிருப்பதாக  

‘என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால்; நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணபோகிறேன்.’ (யோவான் 14 : 2 )

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தை விட்டுப் போகப்போகிறார் என்று அறிந்த சீஷர்கள் அதிகம் சோர்ந்துப்போனார்கள். எல்லா நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுப்போனதாக எண்ணினார்கள். இனி இந்த உலகத்தில் இயேசு இல்லாமல் நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் பலவித கேள்விகளினாலும், சந்தேகங்களினாலும் கலங்கிப்போயிருந்தார்கள். அவர்களைப் பார்த்து இயேசு சொன்னார். ‘உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.’ நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்கையில் கலங்கிப்போகிற அநேக வேளைகள் உண்டு. தான் அதிகம் எதிர்பார்த்திருந்த  வேளையில் தோல்வியைச் சந்திக்கும் போது, தனக்கு அன்புக்குரியவர்கள், நெருக்கமானவர்கள் திடீரென்று இந்த உலகத்தைவிட்டுக் கடந்து போய்விடும்போது, தேவைகளின் நேரத்தில் அல்லது எதிர்காலத்தைக் குறித்த பயஉணர்வு ஏற்படும் போது, மற்றும் அநேகமான சந்தர்ப்பங்களில் கலங்கிப்போகிறார்கள்.

மேலே பார்த்த வசனத்தில் உலகத்துக்குரிய நம்பிக்கையினால் இயேசு அவர்களைத் தேற்றவில்லை. நித்திய ராஜ்யத்தைக்குறித்து, பரம வாசஸ்தலத்தைக் குறித்துச் சொன்னார். ஒரு கிறிஸ்தவனுக்கு வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு இக்கட்டான வேளையிலும் பரலோக நம்பிக்கை மகாபெரிய தைரியத்தைக் கொடுக்கிறது. ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத்தில் அநேக நன்மைகளைக் கண்டாலும், அதனால் அவன் இருதயம் திருப்தியடைவதில்லை. இது அவன் இன்னும் மேலான ஒன்றை நோக்கிப்பார்க்க, வாஞ்சிக்க, வழிநடத்துகிறது.

‘ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்,’ (எபி., 11 : 10) ஆபிரகாம், தேவனே கட்டி உண்டாக்கின நகரத்தை வாஞ்சித்து அதற்காக எதிர்நோக்கியிருந்தான். ‘தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் கலங்காதிருப்போமாக.