“ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1யோவான் 4:4).

      தேவனுடைய பிள்ளைகள் தன்னிலிருக்கிற தேவன் யார் என்பதை உணராமல் வாழும் வாழ்க்கை என்பது ஒரு தோல்வியான வாழ்க்கையாகும். ஆனால் நம்மில் இருப்பவர் யார் என்பதை நாம் அறிந்து வாழும்படியான வாழ்க்கை ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையாகும். ஆகவேதான் யோவான் “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்” என்று சொல்லுகிறார். ஒரு மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாது. இரட்சிப்பு என்பது தேவனுடைய கிருபையைச்  சார்ந்ததாகும். தேவனால் இரட்சிக்கப்பட்ட மனிதனே தேவனால் உண்டான மனிதனாவான். கிறிஸ்தவ வாழ்க்கையானது மெய்யான கடவுள் யார் என்பதை அறிந்து வாழும்படியான வாழ்க்கையாகும்.

      கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவரும், சகலத்தையும் ஆளுகிறவரும், அனைத்தையும் அறிந்து திட்டம் வகுத்தவரும், மீண்டும் வருகிறவருமாக இருக்கிறார். அவரல்லாமல் நம் வாழ்க்கையில் ஒன்றும் நேரிடாது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே நாம் இந்த உலகத்தின் தீமைகளினாலும், சாத்தானின் சோதனைக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு அநேக ஊழியர்கள் பிசாசுகளை துரத்துகிறோம் என்று சொல்லி ஜனங்களை பயமுறுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள். அவ்விதமான ஊழியர்கள் மெய்யான இரட்சகரை காண்பிக்கத் தவறுகிறார்கள். இந்த உலகத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக எதுவும் நிற்க முடியாது. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). நம்மில் இருப்பவர் எல்லாரிலும் பெரியவர் என்பதை உணருங்கள்.