“சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஆபகூக் 2:14).

சமுத்திரம் எவ்வளவாய் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது என்பதை நாம் பார்க்கும்பொழுது, அது பரந்து விரிந்து நிறைவானதாய் இருக்கிறதைப் பார்க்கிறோம். அதேவிதமாக பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆண்டவரை அறிகிற அறிவு என்பது இந்த உலகத்தில் மிகச் சிறந்தது அது தான். இதைப் போன்று வேறொரு அறிவு ஒரு மனிதனுக்கு தெய்வீக ஞானத்தைக் கொடுப்பது என்பது இல்லை. ஒரு மனிதன் எந்தளவுக்கு கர்த்தரை அறிந்திருக்கின்றானோ, அந்தளவுக்கு அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாய், ஆசீர்வாதமுள்ளதாய்க் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதோடு கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவு என்று சொல்லப்படுகிறது. கர்த்தரை அறிகிற அறிவு என்று சொல்லும்போது அவருடைய குணாதிசயங்கள், அவரின் செயல்கள், அவருடைய ஆச்சரியமான வழிமுறைகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக நமக்கு உதவி செய்கிற காரியமாய் இருக்கிறது. ஆனால் அவைகளின் மகிமையை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது, இன்னும் அது மேலானதாக இருக்கிறது. அந்த அறிவின் காரியம் என்பது நம்முடைய வாழ்க்கையில் வெறுமையான ஒரு மூளை அறிவு அல்ல. அதின் மகிமையை நாம் அறிய வேண்டுமென்றால் அது இருதயப்பூர்வமாகக் கர்த்தரை அறிகிற அறிவு என்றும் சொல்லலாம். ஏனென்றால் இந்த மகிமைக்கு ஒப்பான மகிமை வேறுண்டா? ஆகவே ஆண்டவரை அறிகிற அறிவிலும் அதின் மகிமையிலும் எந்தளவுக்கு ஒரு மனிதன் நாளுக்குநாள் வளருகின்றானோ, அந்தளவுக்கு அவனுடைய வாழ்க்கை இந்த உலகத்தில் தேவனுக்குப் பிரியமானதாகக் காணப்படுகிறதாகவும், இந்த உலகத்திற்கு ஒத்த வேஷமல்ல, பரலோகத்தின் சாயலை தரித்துக்கொண்டிருக்கிற வாழ்க்கையையும் அவன் பெற்றிருப்பான். இவ்விதமான ஒரு வாழ்க்கையை நாம் பெறும்படியாக தேவனிடத்தில் ஜெபிப்போம்.