“சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளாகமம் 7:1).
சாலமோனின் ஜெபம் எவ்விதமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் குறித்து இந்தப் பகுதியில் நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் ஜெபிக்கிறோம், ஆனால் அது தேவனால் அங்கீகரிக்கப்படுகிறதா என்பதைக் குறித்து நாம் சிந்திப்பதில்லை. ஆனால் மெய்யான விசுவாசத்தோடும் தாழ்மையோடும் செய்கின்ற ஜெபம் நிச்சயமாக தேவனால் அங்கீகரிக்கப்படும். மேலும் நம்முடைய ஜெபம் இருதயத்திலிருந்து புறப்பட்டு வர வேண்டும். அவ்வாறு இல்லாத ஜெபம் தேவனுடைய அங்கீகரிப்பைப் பெற முடியாது. மேலும் தேவன் ஒரு உன்னதமான விதத்தில் சாலமோனின் ஜெபத்தை அங்கீகரித்ததை நாம் பார்க்கிறோம். நம்முடைய ஜெபமும் தேவனால் அங்கீகரிக்கப்பட நாம் வாஞ்சிப்போம். நம்முடைய ஜெபம் நம் வாழ்க்கையில் மிகப் பெரிய காரியங்களைக் கொண்டு வரும். ஏனென்றால் நாம் விசுவாசிக்கிற தேவன் மிகப் பெரியவர். ஒரு அர்த்தமுள்ள ஜெப வாழ்க்கை நமக்குத் தேவை. அநேக வேளைகளில் நாம் ஜெபிக்கிறோம் ஆனால் அதற்குரிய பதிலை நாம் எதிர்பார்ப்பதில்லை. நம் ஜெப வாழ்க்கை அநேக வேளைகளில் ஒரு கடனுக்காகச் செய்கிற காரியமாய் இருக்கிறது. நாம் இவைகளை விட்டு, ஒரு அர்த்தமுள்ள ஊக்கமான ஜெபத்தைச் செய்யக் கற்றுக்கொள்ளுவோம். நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. அவ்விதமான ஜெபத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். அவ்விதமான ஜெபத்தினால் தேவன் பெரியக் காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்ய இன்றும் வல்லவராய் இருக்கிறார்.