“ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்” (எபேசியர் 5:9).
பவுல் எபேசு திருச்சபை மக்களுக்கு எழுதும் பொழுது, அதற்கு முந்தைய வசனத்தில் ‘முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்’ என்று சொல்லுகிறார். அதாவது அந்தகாரத்தில் இருந்தீர்கள் என்று சொல்லவில்லை. அந்தகாரமாய் இருந்தீர்கள் என்று சொல்கிறார். இது ஒரு பாவியின் நிலையை எவ்வளவு பயங்கரமானதாக சித்தரிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே ஒரு பாவியானவன், ஆண்டவருக்குள் வராதவன். அந்தகாரத்தில் வாழ்கிறவன் மாத்திரமல்ல. அவன் ஒரு அந்தகாரமாகவே இருக்கிறான். இருளில் வாழ்கிறவன் மாத்திரமல்ல இருளாகவே இருந்து இருளில் வாழ்கிறான். அடுத்த பாதியில் ‘இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ என்றும், அதினால் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லுகிறார். ஒரு உண்மையான மாற்றம் ஒரு கிறிஸ்தவனில் நிகழ்வதைக் குறித்து இங்கு சொல்லப்படுகிறது.
நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய ஒரு மாற்றத்தை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்திருக்கிறார் என்பதைக் குறித்து நம்மால் அறிய முடிகிறது. ஆகவே நாம் இந்த நாட்களில் வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடப்பது மாத்திரமல்ல, அந்த வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடக்கிற அந்த வாழ்க்கையில் ஆவியின் கனிகள் வெளிப்படும். ஆகவேதான் ஆவியின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து வாசம்பண்ணுகிற ஒரு வாழ்க்கையை ஆண்டவர் நமக்குத் தருகிறார். அதாவது நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் அது வெளிப்படும். அது மறைந்திருக்க மாட்டாது என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் அவ்விதம் வாழ்வதே கர்த்தருக்குப் பிரியமானது. இதுவே மெய்யான இரட்சிப்பின் அடையாளமாக இருக்கிறது. இன்றைக்கு அநேகர் ஆவியை பெற்றிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆவியானவருடைய உண்மையான தன்மை அவர்களுடைய வாழ்க்கையில் கனிகளிலும் நற்குணத்திலும் வெளிப்படுவதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு கிறிஸ்தவனில் நீதி விளங்காத பொழுது, அது பரிசுத்த ஆவியின் மெய்யான ஆவியின் செயல்பாடு அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.