ஆகஸ்ட் 6            

“முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தை கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்” (மத்தேயு 13:22)

இந்த வசனம் ஒரு கிறிஸ்தவன் பலனற்றவனாய்ப் போவதற்கான காரணத்தைத் தெளிவாய் எடுத்துச்சொல்லுகிறது. நீ எவ்வளவோ தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறாய், ஆனால் ஏன் நீ பலனற்ற கிறிஸ்தவனாய் இருக்கிறாய் என்பதைச் சிந்தித்ததுண்டா? நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படியாக எதிர்ப்பார்க்கப்படுகிறோம்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் உலக கவலைகளினால் அதிகம் நசுக்கப்படுகிறார்கள்.”ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (மத்தேயு 6:25, 27) நம்முடைய வாழ்க்கைக்காக, எதிர்காலங்களுக்காக திட்டமிடுவது தவறில்லை. நாம் ஞானமாய் எல்லாவற்றிலும் சிந்தித்துச்  செயல்படும்படி வேதம் போதிக்கிறது. ஆனால் கவலைப்படுவது தவறு. மேலும் இது விசுவாசமின்மையைக் காட்டுகிறது. “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். “என்ற சத்தியத்தை விசுவாசிக்க மறுக்கிறது. அவிசுவாசம் பெரிய பாவம் என்பதை வேதம் எச்சரிக்கிறது. தேவனை சார்ந்துக் கொண்டவர்களை தேவன் கைவிடுவாரா? மேலும் வேதம், நம்முடைய கவலைகள் நம்மை நசுக்காதப்படி என்ன செய்யவேண்டும் என்றும் போதிக்கிறது. “நீங்கள் ஒன்றுக்கும்ங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”(பிலிப்பியர் 4:6 , 7)