கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 10                     நம்பிக்கையின் அச்சாரம்           சங்கீதம் 56:1–13

     ‘நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;

தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்’ (சங் 56:9).

     தாவீது இராஜா தன்னுடைய எல்லா சூழ்நிலையிலும் உணர்ந்து கொண்ட ஒரு உண்மை, ‘தேவன் என் பட்சத்தில் இருக்கிறார்’. இவ்விதமான நம்பிக்கை உனக்கு உண்டா? அவர் உன்னோடு எப்பொழுதும் உறவுகொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிகிறதா? தேவன் சொல்லுகிறார், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’. தேவனோடு கொண்டிருக்கிற உறவு என்பது மிக உன்னதமானது. தாவீது அதை அறிந்திருந்தார். ஆகவேதான், ‘சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்’ (சங் 46:7) என்று வேதம் சொல்லுகிறது.

      சர்வத்தையும் படைத்து ஆளுகை செய்கிற தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார். தேவன் நம்மோடு கூட இருக்கும்போது நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. ‘ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்’ (ஏசாயா 8:9–10) என்று வேதம் சொல்லுகிறது. நம் வாழ்க்கையின் நம்பிக்கைக்கு அச்சாரமே தேவன் நம்மோடு இருப்பதுதான்.

        ஆகவேதான் பவுல் ரோம திருச்சபைக்கு எழுதின நிருபத்தில், ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?’ என்று சொல்லுகிறார். தேவன் உன் பட்சத்தில் இருக்கிறாரா?  தேவனுக்கு முன்பாக நீ உண்மையாய் வாழுகிற வாழ்க்கை உன்னிடத்தில் உண்டா? அன்பானவர்களே! அவ்விதமாக இல்லையெனில் பாவம் உன்னில் நிலைகொண்டிருக்கிறது. பாவம் மாத்திரமே தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டிக்கிறதாக இருக்கிறது. ஆகவே பாவத்தை நீக்கி இரட்சிக்கிற இயேசுவை நோக்கிப்பார். அவர் உன் பட்சத்தில் இருந்தால் ஒன்றுக்கும் நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை.