மே 10               

“எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்” (சங்கீதம் 116:11).

சங்கீதக்காரன் ஒரு மிகப் பெரிய உண்மையை இங்கு சொல்லுகிறார். அவர் இதை என் மனக்கலக்கத்திலே சொன்னேன் என்பது அதிகமான கலக்கத்தை தன்னுடைய வாழ்க்கையில் கடந்து போன நிலையில், இந்த உண்மையைக் கண்டு பிடித்தேன் என்பதாகச்  சொல்லுகிறார். எந்த மனுஷனும் பொய்யன். இந்த உலகத்தில் ஒருவன் எவ்வளவு நல்லவன் என்பதாகச்  சொல்லப்பட்டாலும், அவன் பொய்யன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாசியில் சுவாசம் உள்ள எந்த மனிதனையும், நாம் அதிக உயர்வாக தேவனுக்குச் சமமான நிலையில் வைக்கக் கூடாது. அதுவும் கூட ஒரு விக்கிரக ஆராதனை. இன்றைக்கு அநேக மக்கள்  சத்தியங்களைவிட, போதகர்களை மேன்மையாக எண்ணுகிறவர்கள் உண்டு. அது மிகப்பெரிய தவறு. போதகனும் கூட ஆண்டவருடைய சத்தியத்திற்குக்  கட்டுப்பட்டவன். அவனும் பாவியாகிய மனிதனே. போதகர் என்பது அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி.  வேதத்தின் அடிப்படையில் மக்களை வழிநடத்த வேண்டியவன். எப்பொழுதும் அதை உணர்ந்து ஊழியம் செய்கிறவனாகக் காணப்பட வேண்டும். 

 போதகன் எப்பொழுதும் மக்களைத்  தன் பக்கமாக வசப்படுத்த எண்ணக்கூடாது. ஆண்டவரின் பக்கமாக அவர்களை வழிநடத்த வேண்டும். அநேக சபைகளில் போதகர்கள்  ஜனங்களை தங்கள் பக்கமாக வழிநடத்த ஆசைப்படுவது, ஆண்டவருக்கு மகிமை செலுத்தாமல், தனக்கே மகிமையைத்  தேடுவதாகும். அது ஒருவிதத்தில் சாத்தானுடைய நிலையை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. இது மிக அபாயகரமானது. இதைக்குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். சபை மக்களும் ஆண்டவருடைய வார்த்தையைச்  சார்ந்து வாழ்கிற விதமாக வழிநடத்தப்பட வேண்டும். ஆண்டவருடைய வார்த்தையின் பக்கமாக ஒரு ஊழியன், சபை மக்களை வழிநடத்த தவறுவதைப் போல மிகப்பெரிய ஒரு பாவம் எதுவும் இல்லை. சபைமக்கள் ஆண்டவருடைய வார்த்தையின் பக்கமாக வழிநடத்தப்படும் பொழுது தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். விசுவாசி வழி தவறும் பொழுது, தேவனுடைய வழியில் கண்டித்துப்  புத்தி சொல்லவேண்டும். நீங்கள் எவ்வாறாக வழிநடத்தப்படுகிறீர்கள்?