கிருபை சத்திய தினதியானம் 

மார்ச் 4               கடந்துபோகும் நாட்கள்               சங்கீதம் 39:1-13

“கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று

உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு

இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்கீதம் 39:4).

     எவ்வளவு அருமையான ஜெபம் இது என்று பாருங்கள். இந்த வசனத்தில் சங்கீதக்காரன் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று காரியங்களை நினைவு கூறும்படியாக ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம். முதலாவது அவர் கூறுவது, நான் எவ்வளவு நிலையற்றவன்! நம்முடைய வாழ்க்கையில் நாம் அநேக சமயங்களில் இந்த உலகத்தில் என்றென்றும் வாழுவதைப் போல எண்ணிக்கொண்டு காரியங்களை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், இந்த உலகமும் நிலையற்றதும், அற்பமான சொற்ப காலங்களைக் கொண்டது என்பதை மறந்துவிடுகிறோம். அநேக சமயங்களில் உலகத்தின் காரியங்களினால் நாம் பாதிக்கப்பட்டு, நித்தியத்தின் காரியங்களை மறந்துவிடுகிறோம். ஆனால் நாம் நித்தியத்தின் காரியங்களை நினைவு கூறுவது மிகவும் அவசியமானது.

       இரண்டாவதாக, அவருடைய முடிவை அறிந்துகொள்ளும்படியாக இந்த இடத்தில் ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம். நமக்கு நிச்சயம் ஒருநாள் முடிவு என்பது உண்டு. அதையும் நாம் மறந்து விடக்கூடாது. அந்தநாள் நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லுவோம். அந்த நாளானது ஒரு மெய்யான தேவப்பிள்ளைக்கு அது மகிமைகரமானது. நித்திய நித்தியமாய் தேவனோடு இருக்கும்படியான, தெய்வீக நாளின் ஆரம்பமாக அந்த நாள் இருக்கும். ஆனால் தேவனற்று இருப்பவர்களுக்கோ, அந்த நாள் அதிபயங்கரமான நாள். தேவனுடைய தண்டனையை நித்திய நித்தியமாய் அனுபவிக்கும்படியான ஆரம்ப நாள்.

       மூன்றாவதாக, இந்த உலகத்தில் வாழும் நாட்களின் அளவை எனக்கு தெரிவியும் என்கிறார். இந்த குறுகிய கால வாழ்நாட்களில், நாம் தேவனுக்கென்று எவ்வளவாய் பணிசெய்து, நம்முடைய பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்த்து வைப்பது மிக நல்லது. வாம் வாழுகிற நாட்கள் சிறிது காலம்தான் என்பதை அறிந்து, காலத்தை வீணடிக்காமல், பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவது நல்லது. ஆகவேதான் சங்கீதக்காரன், “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்”(சங் 90:12) என்று சொல்லுகிறார். நம் நாட்களை அறிந்து கர்த்தருக்கென்று பணி செய்வதே சிறந்த ஞானமாக இருக்கிறது. மெய்யான ஞானமுள்ள இருதயம் எதுவென்று சொன்னால், இந்த உலகத்தில் கர்த்தருடைய காரியங்களை முதன்மைப்படுத்தி, அவருக்கென்று வாழுவதே ஆகும்.