மே 12               

“மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே” (பிரசங்கி 11:8).

பிரசங்கியாகிய சாலமோன் தன்னுடைய வாழ்க்கையில் கடந்துபோன நிகழ்வுகளை எண்ணிப் பார்த்து எல்லாம் மாயை என்று சொல்லுகிறார். மனுஷனுடைய வாழ்நாட்களை குறித்து இங்கு சொல்லுகிறார். ‘மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும்’ என்று சொல்லுகிறார். பொதுவாக மனிதன் தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று எல்லாக்  காரியங்களையும் நடத்துகிறான். அவனுடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் மகிழ்ச்சியாக நாட்களை செலவழிக்க வேண்டும் என்பதுதான். ஒருவேளை அவன் மகிழ்ச்சியாக அநேக வருடங்கள் கழிந்தாலும், அவன் தன் வாழ்க்கையில் கடந்து போன இருளின் நாட்களை நினைக்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஏனென்று கேட்டால் அவனுடைய மகிழ்ச்சியான நாட்களைவிட, இருளின் நாட்களே அவனுக்கு  வாழ்க்கையை குறித்து சிந்திப்பதற்கு வழிகாட்டும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் வாழ்க்கையின் நோக்கத்தை மறந்துவிடுகிறோம். நாம் இந்த உலகத்தில் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டு, எந்த நோக்கத்தோடு  வாழ்கிறோம் என்பதையே மறந்து வாழ்கிறோம். ஆனால் ஒருவேளை இருளின் நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமான எண்ணங்களை நமக்குள் கொண்டு வந்து நம்மை சிந்திக்க வைக்க வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்ல நாம் நம்முடைய வாழ்க்கையில் இருளின் நாட்களில்தான் விசுவாசத்தைப்  பிரயோகித்து, அதில் நாம் ஆண்டவரை அவருடைய மாறாத உண்மைத்  தன்மையைக் கண்டுகொள்ள முடியும். மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆண்டவரைத்  தேட விரும்புவதில்லை. ஆனால் கஷ்டங்கள் வந்தால் நாம் ஆண்டவரைத்  தேட விரும்புகிறோம், தேடுகிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதைக் காட்டிலும், துக்கமாய் இருப்பது நமக்கு நல்லது. அதுவும் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களைச்  சிந்திக்கத்  தூண்டி நம்மை செம்மைப்படுத்துவதற்கு அது துணைபுரியுமானால், எல்லாம் மாயை என்பதை விளங்கிக் கொண்டு, இந்த மாயையிலும் நன்மையை தேடுவதே மெய்யான ஆவிக்குரிய விவேகமாகும்.