“கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்” (சங்கீதம் 33:11).

நம்முடைய ஆலோசனைகள் மிகத் தற்காலிகமானது. அவை தவறக்கூடியவைகள். அது ஆசீர்வாதமற்றவைகளாகக் காணப்படக்கூடும். கர்த்தருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய ஆலோசனையைத் தேடவேண்டும். ஏனென்றால் அந்த ஆலோசனை ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் அது நித்திய நித்தியமாய் நிலைத்திருக்கின்ற ஒன்றாய் காணப்படும். ஆகவே நாம் எப்போதும் கர்த்தருடைய ஆலோசனையை சார்ந்துகொள்வோம். “அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்” (ஏசாயா 46:10) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நமக்கு ஒவ்வொரு நாளும் அவருடைய ஆலோசனை தேவை. அநேக வேளைகளில் நாம் நம்முடைய ஆலோசனைகளின்படி செய்யப் பிராயசப்படுகிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் தோல்வியைத் தழுவுகிறோம். நாம் அவரிடத்தில், ஆண்டவரே உம்முடைய ஆலோசனை எனக்கு தாரும் என்று தேவனிடத்தில் ஜெபிப்போம். ஏனென்றால் அவர் தம்முடைய ஆலோசனையின் படியாக, சகலத்தையும் நிச்சயமாக நடப்பிக்கிறவராக இருக்கிறார். “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?” (புலம்பல் 3:37). அவருடைய யோசனைகள் உன்னத யோசனைகள், அவை மகா ஆழமானவைகள் என்று சங்கீதம் 92:5 இல் பார்க்கிறோம். ஆம், ஆண்டவருடைய யோசனைகள் மிக ஆழமானவைகள். அவைகள் மிக நீண்ட காலத்திற்கும் நிலைத்திருக்கும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் கர்த்தருடைய ஆலோசனையே நாடுவோம். ஞானத்தில் குறைவுள்ளவன் என்னிடத்தில் கேட்கக்கடவன் என்று தேவன் சொல்லுகிறார்.