ஜூன் 12
“உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது” (சங்கீதம் 119:24).
இங்கு சங்கீதக்காரன் சாட்சிகள் என்று சொல்லுவது தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது. 119 வது சங்கீதம் முழுவதும் ஆண்டவருடைய வார்த்தையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தையும், மேன்மையையும், வல்லமையையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தை நமக்கு இன்பத்தை அளிக்கிறதா? சங்கீதக்காரன் இங்கு தேவனுடைய வார்த்தை எனக்கு இன்பமாக இருக்கிறது என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எப்போது தேவ வார்த்தை நமக்கு இன்பமாக இருக்க முடியும்? ஆண்டவர் நம்மோடு பேசும்படி, அவருடைய சத்தத்தை வாஞ்சையோடு கேட்க, அவர் சமூகத்தில் வரும்பொழுது நிச்சயமாக தேவன் நம்மோடு பேசுகிறவராக இருக்கிறார். வேத வாசிப்பின் மூலமாக, பிரசங்கத்தின் மூலமாக தேவன் இன்றும் நம்மோடு பேசுகிறவராக இருக்கிறார். ஆனால் நாம் கடனுக்காக ஏதோ வேதத்தை வாசிக்க வேண்டும் என்று எண்ணி, வேதத்தை வாசிப்போமானால் அது நமக்கு ஒருபோதும் இன்பமாக இருக்க முடியாது.
வேதத்தின் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்போது, நமக்கு இன்பமும் மகிழ்ச்சியுமாய் இருக்கும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு ஆலோசனை என்பது மிக முக்கியமானது. ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நாம் கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பது மிக அவசியமானது. ஏனென்று கேட்டால் மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றும் வழிகள் உண்டு, ஆனால் அவைகள் மரண வழிகள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே நாம் இந்த உலகத்தில் ஆண்டவருடைய ஆலோசனையை பெற்று வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் நான் அவருடைய ஆலோசனையை எங்கே பெற்றுக்கொள்ளமுடியும்? அவருடைய வார்த்தையின் மூலமாக மாத்திரமே முடியும். இன்றைக்கும் ஆண்டவர் அவர் வார்த்தையின் மூலமாக நமக்கு ஆலோசனையைத் தந்து நம்மை நடத்துகிறவராக இருக்கிறார். அந்த வார்த்தையே நமக்கு நல்ல ஆலோசகராக இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் தேவ ஆலோசனையை தேவ வார்த்தை மூலம் பெற்று வாழுவதைப் போன்று மிகச் சிறந்த காரியம் வேறொன்றுமில்லை.அநேகர் இவ்விதம் வழாததினால் வாழ்க்கையில் தோற்றுப்போய் துவண்டு விடுகிறார்கள்.