“கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” (யோபு 42:12).

யோபுவைப் போல தன்னுடைய வாழ்க்கையில் பாடுகளையும் உபத்திரவங்களையும் கடந்துபோனவர்கள் உண்டா? ஆனால் இதன் மத்தியிலும் யோபுவின் வாழ்க்கையில் காணப்பட்ட ஒரு முக்கியமான காரியம் பொறுமை. வேதம் யோபுவின் பொறுமையைக் குறித்துப் பேசுகிறது. அவன் தன்னுடைய வாழ்க்கையில் தன் பொறுமையை இழக்காமல் கர்த்தருக்குக் காத்திருந்தான். தன் நண்பர்களுக்காக ஜெபிக்கிற ஒரு வேளை வந்தபோதும் அவர்களுக்காக ஜெபித்தான். நம்முடைய வாழ்க்கையில் பொறுமை என்பது மிக முக்கியமான ஒரு காரியம். அநேக வேளைகளில் நாம் நம்முடைய பொறுமையை இழந்துவிடுகிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறது, விசுவாசத்தின் ஒரு முக்கிய அம்சம் பொறுமை. விசுவாசிக்கிறவன் பதறான், அமெரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாய் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பொறுமை இல்லையென்றால் அவன் தன் விசுவாச வாழ்க்கையில் மிகக் குறைவுபட்டவன் என்றே சொல்லவேண்டும். யோபு தன்னுடைய வாழ்க்கையில் பொறுமையாய் இருந்ததினால் மாத்திரமே, அவன் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காண முடிந்தது. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் என்று வேதம் சொல்லுகிறது. நாம் யோபுவின் வாழ்க்கையைப் பார்ப்போம். ஒருநாளும் பொறுமைக்கு பலன் இல்லாமல் போகாது. அதின் பலன் அதிகமாகவே இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் பொறுமையைக் கற்றுக்கொள்ளுவோம், தேவனுடைய சாட்சியைக் காத்துக்கொள்ளுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை விளங்கச்செய்வோம். அப்பொழுது கர்த்தருடைய ஆசீர்வாதத்தை நம் வாழ்க்கையில் பார்த்து அவரை மகிமைப்படுத்துவோம்.