கிருபை சத்திய தின தியானம்

மே12                      வேதம் என் மனமகிழ்ச்சி        சங் 119 : 89 – 96

“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால்,

என்  துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங் 119:92)

       துக்கம் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையின்மைக்கு வழிநடத்துகிறது. துக்கம் நமக்குள் சோர்வு, தளர்வை உண்டுப்பண்ணுகிறது. வாழ்க்கையில் மனிதனுக்கு சஞ்சலமும்,  வேதனையும் துக்கமும் பங்காய் நியமிக்கப்பட்டிருகிறது. இந்த சங்கீதக்காரனும் இவ்விதமான துக்கத்தில் கடந்து போயிருக்கிறான். இன்றைக்கு அநேகர் துக்கம் என்றால் அதிலேயே முழுகிவிடுகிறார்கள். முற்றிலும் நம்பிக்கையின்மைக்குள் போய் விடுகிறார்கள். அதுவல்ல கிறிஸ்தவ வாழ்க்கையென்பது. துக்கம் வரலாம் சோதனைகள் வரலாம். ஆனால் அதன் மத்தியில் தேவனுடைய துணையோடு கடந்து செல்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. என்றும் துக்கமில்லாத ஒரு தேசத்தை நோக்கிப் போகிற பிரயாணத்தில் இருப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. ‘இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை’. (வெளி 21 : 4 )

     ஆனால், இவ்விதமான வேளையில் சங்கீதக்காரன் நல்ல முன்மாதிரியை வைத்திருக்கிறான் பாருங்கள்.  வேதத்தின் பக்கமாகத் திரும்பினான். வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை மறவாதே. இது ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த வனாந்திரப் பாதையில் வழிக்காட்டியாக , தீபமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. துக்கத்தின் பாதை இருண்ட பாதை அதில் நடக்க உனக்கு வெளிச்சம் தேவை அதை நீ தேவனுடைய வார்த்தையின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்காகவே தேவன் நமக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறார்.

   ஒரு கிறிஸ்தவனுக்குத் தேவையான அனைத்தையும் தேவன் தம்முடைய வார்த்தையில் கொடுத்திருக்கிறார். தேவ ஆவியானவர் உன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றவண்ணமாக தமது வார்த்தையிலிருந்து உனக்குக் கொடுக்கிறார். சங்கீதக்காரன் தன்னுடைய துக்கத்திலே வேதம் மனமகிழ்ச்சியாயிருக்கிறது என்று சொல்லுகிறார் அன்பானவர்களே! துக்கத்தில் அமிழ்ந்துபோகாமல் அதன் மத்தியில் மனமகிழ்ச்சியாய் கடந்துபோக சங்கீதக்காரனுக்கு வேதம் உதவினால் , உனக்கும் வேதம் அவ்விதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.